2 ரஷ்யர்கள் மர்ம மரணம்; மேலும் ஒருவரை காணவில்லை: ஒடிசாவில் அதிர்ச்சி
ஒடிசாவில் அண்மையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் அண்மையில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது காணாமல் போன நபர் உக்ரைன் போருக்கு எதிரான செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன ரஷ்ய நாட்டு எம்.பி.யும் புதினின் தீவிர விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையில் ஒரு நபர் கையில் இரு பதாகையுடன் இருந்தார். அதில் நான் ஒரு ரஷ்ய அகதி. நான் போருக்கு எதிரானவன். நான் புதினுக்கும் எதிரானவன். எனக்கு வீடில்லை. எனக்கு உதவுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த நபரை புகைப்படம் எடுத்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பகிர அது இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் தான் ரஷ்ய தொழிலதிபர் பாவெல் அன்டோவ் மற்றும் அவருடன் பயணித்த விளாடிமிர் பிடெனோவும் ராயகடா மாவட்டத்தில் ஒரு ஓட்டலில் இறந்தனர். ஆன்டோவ் ரஷ்ய நாட்டு எம்.பி.யும் கூட. ஆன்டோவ் ஓட்டலின் 3வது மாடியில் இருந்து குதித்து கடந்த 24 ஆம் தேதி இறந்தார். பிடெனோவ் டிசம்பர் 22 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் பதாகையுடன் திரிந்த ரஷ்யரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ரயில்வே போலீஸ் தரப்பு, சில பயணிகள் ரஷ்யர் பற்றி தகவல் கொடுத்ததும் நாங்கள் அவரிடம் விசாரித்தோம். அவருடைய பாஸ்போர்ட், விசா எல்லாம் சரியாகவே இருந்தன. அதனால் நாங்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவரால் ஒருவார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச இயலவில்லை. அவருடைய பதாகையில் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அவரைக் காணவில்லை. ராயகடாவில் இரண்டு ரஷ்யர்கள் அதுவும் இருவரும் புதினுக்கு, உக்ரைன் போருக்கு எதிரானவர்களாக இருந்து கொல்லப்பட்ட நிலையில் நான் புதின் எதிர்ப்பாளர் என்று பதாகையிலேயே வெளிப்படையாக எழுதியிருந்த ரஷ்யர் மாயனமானது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது என்று கூறியுள்ளனர். ரஷ்யர்கள் இருவர் உயிரிழப்பு பற்றி சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதின் விருப்பம்:
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷிய படைகள் திரும்பப்பெற்றுள்ளது.
இதற்கு மத்தியில், அணு ஆயுத பயன்பாடு குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. சமீப காலமாகவே, ரஷியா போரில் பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி அந்நாடு புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக புதின் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். உக்ரைனும் அமெரிக்காவும் ரஷியாவின் கவலைகளை புறக்கணித்துள்ளதாகவும் உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி ரஷியாவை பலவீனமாக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முயல்வோம். அதுவே, சிறந்தது. எல்லாப் மோதல்களும் ஏதோ ஒரு விதத்தில் பேச்சு வார்த்தைகளுடன் முடிவடையும்.. நமது எதிரிகள் (கிய்வில்) எவ்வளவு வேகமாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும்" என்று கூறியது கவனிக்கத்தக்கது.