Crime : பெண்ணுடன் ஆபாச பேச்சு...மிரட்டி பணம் பறித்த கும்பல்...வலையில் சிக்கிய பிரபல நடிகரின் தந்தை..!
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சமீப காலமாக, சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்டு நபரின் நிர்வாண வீடியோவோ அல்லது புகைப்படமோ இருப்பதாக கூறி, அந்த நபரை போனில் அழைக்கும் கும்பல், பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த வலையில் சிக்கியவர் பிரபல திரைபடத்தில் நடித்த நடிகரின் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் குறித்து விரிவாக விவரித்த வெர்சவா போலீஸ் தரப்பு, "75 வயதான புகார்தாரர் (நடிகையின் தந்தை) ஜனவரி 10 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தனது வெர்சோவா இல்லத்தில் தனக்கு ஒரு ஆபாசமான தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார்.
அவர் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டார். விரைவில், அதே எண்ணில் இருந்து அவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ வந்தது. புகார்தாரர் அந்த எண்ணை பிளாக் செய்துள்ளார்.
ஜனவரி 12ஆம் தேதி அன்று, பாதிக்கப்பட்டவருக்கு வேறொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. மேலும், அழைப்பாளர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஷிலால் சுக்லா என்று அடையாளம் காட்டி கொண்டார். ஒரு பெண்ணுடன் அவர் ஆபாசமாக உரையாடுவது கேமராவில் சிக்கியதாக அவர் கூறியுள்ளார்.
நடிகரின் தந்தைக்கு எதிராக அந்த பெண் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் என அவர் மிரட்டப்பட்டுள்ளார்.
யூடியூப்பில் இருந்து வீடியோவை அகற்றுவதற்காகவும் அவர் மீது மேலும் அவதூறாகப் பேசுவதைத் தடுக்கவும் பெண்ணின் சமூக ஊடக கணக்குகளைத் தடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என அவர் மிரட்டியுள்ளார்.
அடுத்த இரண்டு மணிநேரங்களிலேயே, போன் செய்தவருக்கு பாதிக்கப்பட்டவர் மொத்தம் 89,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த நபர் ஜனவரி 13 அன்று தனது மகன் மற்றும் மருமகளுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர்கள் காவல் நிலையத்திற்கு விரைந்து எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
“இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல, சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பல், குஜராத் தொழிலதிபரிடம் 2.69 கோடி ரூபாயை மிரட்டி பறித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலதிபர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மோர்பியை சேர்ந்த ரியா சர்மா என சொல்லி கொண்டு இவருக்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
நிர்வாண வீடியோ இருப்பதாக கூறி அந்த தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் அந்த கும்பல் பணத்தை பறித்துள்ளது.