ABP C Voter opinion poll: ராஜஸ்தானில் சரித்திரத்தை மாற்றி எழுதுமா காங்கிரஸ்? கம்பேக் கொடுக்குமா பாஜக?
மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
பாஜக அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
சரித்திரத்தை மாற்றி எழுதுமா காங்கிரஸ்?
சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மற்றும் அக்கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், கட்சியின் மேலிடம் எடுத்த முயற்சியால் அது தற்போது ஓய்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி, அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஆட்சியை பிடிக்க பாஜகவும் அதிரடி காட்டி வருகிறது. ஆனால், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தேசிய தலைவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் பாஜக முகமாக இருந்த வந்த வசுந்தரா ராஜேவை ஓரங்கட்ட கட்சி மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வசுந்தரா ராஜேவுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தொடக்கத்தில் இருந்தே, ஏழாம் பொருத்தம் என கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல், பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜேவின் பெயரை அறிவித்து, பிரச்னையை சற்று தீர்த்து வைத்தது பாஜக மேலிடம்.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
இந்த நிலையில், ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதற்கு முன்பாக, ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் ராஜஸ்தானில் இந்த முறையும் அதே ட்ரெண்ட்தான் தொடர உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 101 தொகுதிகள் தேவைப்படுகிறது.
இச்சூழலில், 114 முதல் 124 தொகுதிகளில் வென்று, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 67 முதல் 77 இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 0 முதல் 4 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திருமணமான பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. பாஜக கொடுத்த சர்ப்ரைஸ்..