Madhya Pradesh: காரில் வந்த இளைஞர்.. திடீரென கேட்டுக்குள் கையை விட்டு செய்த காரியம்!
அதாவது வீடு, நூலகம், அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இந்த திருட்டு நடைபெறலாம். செய்தித்தாள்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நியூஸ் பேப்பரை திருட ஒருவர் ரூ.8 லட்சம் மதிப்புடைய காரில் வந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக உள்ளூர் முதல் உலகம் வரை ஒவ்வொரு வகையிலான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. என்னதான் தண்டனைகள், சட்டங்கள் கடுமையாக்கப் பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் குற்றங்கள் மிக வித்யாசமான முறையில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அப்படியாக நாம் தினசரி பார்க்கக்கூடிய ஒரு சம்பவம் என்பது செய்தி தாள் திருடுவது.
அதாவது வீடு, நூலகம், அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் இந்த திருட்டு நடைபெறலாம். செய்தித்தாள்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பலருக்கும் காலையில் செய்தித்தாள் படிக்காமல் பொழுது கழியாது என சொல்லலாம். அப்படியான செய்தித்தாள்கள் பல நிறுவனங்களின் பெயரில் பல்வேறு கட்டணங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
காரில் வந்து நியூஸ் பேப்பர் திருட்டு
மத்தியப்பிரதேசம் மாநிலம் சிவபுரியில் உள்ள மஹால் சாலையில் இருக்கும் மஹாராணா பிரதாப் காலனியில் வழக்கறிஞர் சஞ்சீவ் பில்கையா என்பவரின் அலுவலகம் உள்ளது. இங்கு நவம்பர் 12ம் தேதி காலை 10 மணியளவில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் சஞ்சீவ் பில்கையா தனது அறையில் சக ஊழியருடன் ஒரு வழக்கு குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரின் அலுவலகத்திற்கு வெளியே ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிசையர் கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு நபர் அலுவலகத்தின் வெளியே சில நிமிடங்கள் நின்று சுற்றும் முற்றும் பார்க்கிறார்.
பின்னர் சற்றும் தாமதிக்காமல் வழக்கறிஞர் அலுவலக வாயிலில் இருக்கும் நியூஸ் பேப்பரை திருட முயற்சிக்கிறார். அவருக்கு நடுவில் ஒரு இரும்பு கேட் இருக்கும் நிலையில், முதல் முயற்சியில் தோல்வியடைகிறார். ஆனால் இரண்டாம் முயற்சியில் அதனை திருடி விட்டு லாவகமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
இதனை சிசிடிவி காட்சிகள் மூலமாக கண்ட சஞ்சீவ் பில்கையா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த சரகத்திற்குட்பட்ட காவல்துறையினரை அழைத்து புகார் தெரிவித்தார். அவரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் அலுவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த செய்தித்தாள் திருடனை தேடி வருகின்றனர்.
இப்படியான காரில் வந்து திருடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. காரில் வந்து ஆடு திருடுவது ஒரு பக்கம் என்றால், 2023 ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டுக்காக குருகிராமில் வைக்கப்பட்ட ரூ.400 மதிப்புள்ள செடிகளை திருட ரூ.40 லட்சம் மதிப்புள்ள காரை திருடர்கள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





















