Ladakh Accident: அதிர்ச்சி.. லடாக்கில் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் ..9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
விபத்தில் இறந்தவர்களில் எட்டு ராணுவ வீரர்களும் ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (ஜேசிஓ) ஆகியோரும் அடங்குவர்.
லடாக்கின் லே மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் மோதியதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் இறந்தவர்களில் எட்டு ராணுவ வீரர்களும் ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (ஜேசிஓ) ஆகியோரும் அடங்குவர்.
லடாக்கில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்:
கரு காரிஸனில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்கு சென்று கொண்டிருந்த போது கியாரி நகருக்கு 7 கிமீ முன்னால் உள்ள பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது. 34 பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட படைப்பிரிவு, எஸ்யூவி மற்றும் ஆம்புலன்ஸின் பயணித்து கொண்டிருந்தது. தெற்கு லடாக்கின் நியோமாவில் உள்ள கெரேயில் நேற்று மாலை 6:30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
இதை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "லடாக் சாலை விபத்தில் நமது வீரம்மிக்க வீரர்களை இழந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கள்:
இதேபோல் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
லடாக்கை பொறுத்தவரை, சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் சமீப காலமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட வருகிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு, மே மாதத்தில் சீனா ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றது.
அதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக்கில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.
சீனாவின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், இந்திய ராணுவ வீரர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். இந்த சூழலில், நேற்று லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.