PM Modi: ”மோடி பிரதமர் பணியை சரியாக கையாள்கிறார்” - 75% ஆதரவு என ஆய்வில் தகவல்
PM Modi: பிரதமர் மோடி தனது பதவியை சிறப்பாக கையாள்வதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
PM Modi: மோடி தனது பிரதமர் பதவியை எப்படி கையாள்கிறார் என்பது தொடர்பான ஆய்வில், 75 சதவிகிதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு 75% ஆதரவு:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற Ipsos IndiaBus PM அப்ரூவல் ரேட்டிங் சர்வேயின்படி, நரேந்திர மோடி தனது பிரதமர் பதவியை சரியாக கையாள்வதாக, 75 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆய்வில் கிடைத்த 65 சதவிகித ஆதரவுடன் ஒப்பிட்டால், மோடிக்கான ஆதரவு தற்போது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வடக்கு மண்டலம் (92 சதவீதம்), கிழக்கு மண்டலம் (84 சதவீதம்), மேற்கு மண்டலம் (80 சதவீதம்) என சில நகரங்களை சேர்ந்த மக்கள் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்காக மிக உயர்ந்த மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர். அதேநேரம், தென்மண்டலத்தில் 35 சதவிகித மக்கள் மட்டுமே, பிரதமர் மோடி தனது பணியை சிறப்பாக செய்வதாக வாக்களித்துள்ளனர்.
எங்கு ஆதரவு அதிகம்..!
முதல் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் முறையே 84 மற்றும் 80 சதவிகித மக்கள், மோடி தனது பிரதமர் பதவியை சரியாக கையாள்வதாக வாக்களித்துள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 79 சதவிகிதமும், 18-30 வயதுடையவர்கள் 75 சதவிகிதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பெருநகரங்களில் 64 சதவிகிதத்தினரனும், இரண்டாம் நிலை பெருநகர மக்கள் 62 சதவிகிதம் பேரும், சுயதொழில் செய்பவர்களில் 59 சதவிகிதம் பேரும், மோடி தனது பணியை சிறப்பாக செய்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
துறைவாரியான செயல்பாடு..!
ஆய்வு அறிக்கையின்படி, மோடி அரசு சிறப்பாகச் செயல்பட்ட பகுதிகளில் முதன்மையாக கல்வி, சுகாதாரம், தூய்மை, மற்றும் மருத்துவ பணி ஆகிய துறைகள் உள்ளன. அதைதொடர்ந்து, மாசு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் (56 சதவிகிதம்), வறுமையைக் குறைத்தல் (45 சதவிகிதம்), பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் (44 சதவிகிதம்), வேலையில்லாத் திண்டாட்டம் (43 சதவிகிதம்), ஊழலை ஒழித்தல் (42 சதவிகிதம்) ஆகிய துறைகளில் அரசாங்கம் சராசரியாகச் செயல்பட்டிருக்கிறது.
ஆய்வின் விவரங்கள்:
Ipsos IndiaBus, கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தியதாகவும், நாட்டின் நான்கு மண்டலங்களிலிருந்தும் வெவ்வேறு விதமான குடும்ப பின்னணியை கொண்ட இரு பாலினத்தைச் சேர்ந்த 2,200 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. நகர்ப்புற இந்தியர்களின் பிரதிநிதித்துவ பார்வையை வழங்கும் பெருநகரங்கள், அடுக்கு 1, அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக Ipsos IndiaBus கூறியுள்ளது பதிலளித்தவர்கள் நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் வாக்களித்துள்ளனர். ஆய்வின் முடிவுகளை தேசிய சராசரிக்கு கொண்டு வருவதற்கு மக்கள்தொகை மற்றும் நகர-வகுப்பு மக்கள்தொகை மூலம் தரவு எடைபோடப்பட்டது என்று, Ipsos IndiaBus அமைப்பு விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த ஆய்வு முடிவுகள் பிரதமர் மோடி செயல்பாடு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதை காட்டுகிறது.