Leopard Cubs Death: பரபரப்பு.. உயிரியல் பூங்காவில் பரவும் வைரஸ் நோய்.. 7 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்த சோகம்..
பெங்களூருவில் இருக்கும் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் ஃபெலைன் பான்லூகோபீனியா வைரஸ் பாதிப்பால் 7 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துள்ளன.
பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் 7 சிறுத்தை குட்டிகள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நேற்றைய தினம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபெலைன் பான்லூகோபீனியா (FP - Feline panleukopenia) என்பது பூனைகளின் பர்வோ வைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். குறிப்பாக பூனைக்குட்டிகள் இந்த வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Virus outbreak at Bengaluru's Bannerghatta Zoo. Seven leopard cubs, all aged between
— Vinod (@Imvinod07) September 19, 2023
3 and 10 months died due to
Panleucopenia virus pic.twitter.com/L5Kj97q6Nn
7 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்ததை பற்றி அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று இந்த நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 குட்டிகளும் மூன்று முதல் எட்டு மாதங்களுக்கு இடைப்பட்டவை. 7 குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் அவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னர்கட்டா உயிரியல் பூங்காவின் செயல் இயக்குனர் ஏ.வி.சூர்யா சென் கூறுகையில், ஏழு குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. இந்த வைரஸ் நோயால் எந்த உயிரிழப்பும் அதன்பின் ஏற்படவில்லை. மேலும் உயிரியல் பூங்கா முழுமையான சுகாதாரத்துடன் இருப்பதை உறுதி செய்துள்ளோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மையம் முழுவதும் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்த வைரஸ் நோய் தாக்கம் கண்டறியப்பட்டது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 15 நாட்களில் 7 சிறுத்தை குட்டிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. நாங்கள் ஒன்பது சிறுத்தை குட்டிகளை சஃபாரி பகுதியில் விடுவித்தோம், அவற்றில் நான்கு குட்டிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது. மேலும் மூன்று குட்டிகள் மீட்புப்மையத்தில் இருக்கும் போது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சரியான சிகிச்சை முறை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸின் தன்மையை விவரித்த அதிகாரி, ஃபெலைன் பான்லூகோபீனியா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டால், விலங்குகளின் குடல் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீரிழப்பு ஆகியவையால் விலங்குகள் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும்தன்மை கொண்டது. நோய்த்தொற்று ஏற்பட்ட 4 முதல் 5 நாட்களிலேயே விலங்குகள் உயிரிழப்பதாக தெரிவிக்கின்றனர்.