Ethylene Oxide in Food: புற்றுநோய் ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு.. இந்தியாவை சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் கலப்படம்..
இந்தியாவை சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2020 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில், ஐரோப்பிய ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த 527 உணவுப் பொருட்களில் புற்றுநோயுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் எத்திலீன் ஆக்சைடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் 1991 இல் எத்திலீன் ஆக்சைடு உபயோகத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும், இறக்குமதி அதிகரித்ததால், அதிகாரிகள் இப்போது தங்கள் சோதனைகளை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து 527 பொருட்கள் அதில் உலர் கொட்டைகள் (nuts) மற்றும் எள்ளு (313), மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் (60), டையட் ஃபுட் (diet food) (48), பிற உணவுப் பொருட்கள் (34) இந்த பட்டியலில் அடங்கும். எள் விதைகள், கருப்பு மிளகு மற்றும் அஸ்வகந்தா போன்ற சில பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருந்தாலும் அவை ஆர்கானிக் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 87 பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்கள் சூப்பர் மார்க்கெட் அல்லது சந்தையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பல பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய எள் விதைகளைப் பயன்படுத்தி ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட ஹம்முஸ் (hummus) முதல் பேக்கரி பொருட்கள் மற்றும் மூலிகை உணவுப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது.
எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?
எத்திலீன் ஆக்சைடு ஒரு நிறமற்ற வாயு. இது பல்வேறு தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். பொருட்களை சுத்தம் செய்யவும், உணவில் கிருமிகள், பூச்சிகள் நீக்க மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு அதிகமாக நாம் உட்கொண்டால் அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல் எத்திலீன் ஆக்சைடை சுவாசிப்பது நம் உடலுக்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் கூட உண்டாகக்கூடும் என கூறப்படுகிறது.
எனவே, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உணவுகளில் எத்திலீன் ஆக்சைடு மிகச் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் போது, அது பொதுவாக பாதுகாப்பானது, ஏனெனில் இது உணவை மிக விரைவாக கெட்டுப்போகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் உணவில் அதிக அளவு எத்திலீன் ஆக்சைடு இருந்தால், அது தீங்கு விளைவிக்கும். அதனால்தான், உணவில் பயன்படுத்தப்படும் எத்திலீன் ஆக்சைட்டின் அளவு நாம் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா என்பதை உணவு கட்டுப்பாட்டாளர்கள் உறுதிப்படுத்துவது முக்கியம்.
பூச்சிகளைத் தடுக்க இது பொதுவாக மசாலாப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவுகளை உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சமீபத்திய அறிக்கைகளின்படி, உணவுக் கட்டுப்பாட்டாளர் FSSAI, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மசாலா பொருட்கள் மீது சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவை புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நாம் ஒவ்வொரு முறையும் உணவு பொருட்களை வாங்கும் போது அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதை படித்துப் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.