Amar Jawan Jyoti: அமர் ஜவான் ஜோதி.. "சிலருக்கு தேச பக்தி புரியாது. தியாகத்தைப் பற்றியும் தெரியாது" - ராகுல்காந்தி கண்டனம்
அமர் ஜவான் ஜோதி, டெல்லி இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக ஒளிரும் ஜோதி.
அமர் ஜவான் ஜோதி, டெல்லி இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக ஒளிரும் ஜோதி. ஆனால் இந்த ஜோதி இன்னும் சற்று நேரத்தில் அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் நாம் அமர் ஜவான் ஜோதியின் ஐந்து சிறப்பம்சங்களை அறிந்து கொள்வோமா?
1. இந்தியா கேட், என்பது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட நினைவிடம். 1914 முதல் 1921 வரை முதலாம் உலகப் போரில் பிரிட்டன் சார்பில் களத்தில் போராடி உயிர்நீத்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.
2.1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி கண்டது. இந்தப் போர் தான் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது. இந்தப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. 1972ல் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நாளன்று இந்திரா காந்தி இந்த அமர் ஜவான் நினைவுச் சின்னத்தை நிறுவினார்.
3. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் இந்த நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்துவது மரபு. ஆனால் கடந்த ஆண்டே பிரதமர் மோடி இந்த மரபை மாற்றிவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு நாளுக்கு முன்னதாகவே அமர் ஜவான் ஜோதி, போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது.
4. தேசிய நினைவுச் சின்னம், 2019 ஆம் ஆண்டு இந்திய கேட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது. அதிலிருந்தே முக்கிய ராணுவ நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்து தேசிய நினைவுச் சின்னத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
5. தேசிய நினைவுச் சின்னத்தில் 25,492 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை 1947 முதல் நடந்த பல்வேறு போர்கள், கால்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை உயிர் நீத்த இந்திய வீரர்களின் பெயர்கள் ஆகும்.
ராகுல் காந்தி கண்டனம்:
"அமர் ஜவான்" என்றால் அழிவில்லாத படை வீரன் என்று பொருள். அந்தப் நினைவுச் சின்னத்தின் நான்கு பக்கங்களிலும் அமர் ஜவான் என்று தங்கத்தால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியின் மீது எல் 1 ரக துப்பாக்கி நின்ற நிலையில் காணப்படுகிறது. அதில் அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் தலைக்கவசமும் காணப்படுகிறது. இந்த பீடம் நான்கு அடுப்புகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது, அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் அந்த அணையா ஜோதி அணைக்கப்படவிருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அணையா ஜோதியாக நமது வீரர்களின் நினைவூட்டிய ஜோதி இன்று அணைக்கப்படுகிறது என்ற விஷயம் பெருந்துயர் அளிக்கிறது. சிலருக்கு தேச பக்தி புரியாது. தியாகத்தைப் பற்றியும் தெரியாது. ஆனால், நாங்கள் நிச்சயமாக நமது வீரர்களுக்காக அதே இடத்தில் மீண்டும் அமர் ஜவான் ஜோதியை நிறுவுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.