(Source: ECI/ABP News/ABP Majha)
Tax Rules : இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
புதிய நிதியாண்டு இன்று முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, பல மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மக்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வருமான வரி விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இது, வரி செலுத்தும் பலருக்கு பலன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, வரி செலுத்துவோர் பழைய வரி கொள்கையை தேர்ந்தெடுக்காத பட்சத்தில், புதிய வரி முறையே வரி விதியாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
புதிய வருமான வரி முறை:
புதிய வருமான வரி விதிப்பை புதிய நிதியாண்டு முதல் மத்திய அரசு இயல்புநிலையாக மாற்றி உள்ளது. இருப்பினும், வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய இன்னும் ஆப்சன் இருக்கிறது.
ஆனால், அவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது, இந்த விருப்பத்தை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். பழைய வரி முறையின் கீழ், வீட்டு வாடகை படி (HRA), வீட்டுக் கடனுக்கான வட்டி, குழந்தைகள் கல்வி படி மற்றும் தொழில்முறை வரிக்கான விலக்கு ஆகியவற்றின் கீழ் வரி செலுத்துவோர் பலன்களைப் பெறலாம். புதிய வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு இந்த பலன் கிடைக்காது.
புதிய வரி விதிப்பை தேர்வு செய்பவர்கள், புதிய அடுக்குகளின்படி வரி விதிக்கப்படும். புதிய வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அதாவது, புதிய வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் ₹ 7 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு வரி விதிக்கப்படாது. இந்த நடவடிக்கையானது சம்பளம் பெறும் வரி செலுத்துவோரை புதிய வரி முறைக்கு மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய வரி வரம்பு:
3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
ரூ.6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
ரூ.9 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
ரூ.12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
ஆனால், தனிநபர் ஒருவர், 10 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அவருக்கு 15 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று அர்த்தமில்லை. 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும், அதே சமயம் ₹ 3 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் (ரூ 15,000 வரி) விதிக்கப்படும்.
மேலும், ₹ 6 லட்சம் முதல் ₹ 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி (ரூ. 30,000 வரி), மீதி ₹ 1 லட்சத்துக்கு 15 சதவீத வரி விகிதம் (மற்றொரு ₹ 15,000), ஆக, அந்த நபருக்கு விதிக்கப்படும். இதனால், மொத்த வரி ₹ 60,000 இருக்கும்.