ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா மர்ம மரணம்; சந்தேகப்பட்டவர் கோவாவில் கைது!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா விவேகானந்த ரெட்டியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி சுனில்யாதவை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவாவில் நேற்று கைது செய்தனர்.
ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரருமான விவேகானந்த ரெட்டியின் மரணத்தில் தொடர்புயை முக்கிய குற்றவாளியான சுனில் யாதவை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவாவில் கைது செய்தனர். முன்னதாக, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி. அவரது சகோதரர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி. அவர் ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்தபோது அமைச்சராக பொறுப்பு வகித்தவர். ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தவர்.
இந்த நிலையில், இவர் கடப்பாவில் உள்ள புலிவெண்டுலாவில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த அன்று அவர் தனது இல்லத்தில் தனியாக இருந்தார். இதனால், அவர் இயற்கையாக உயிரிழக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தார் சந்தேகம் எழுப்பினர்.
தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது மரணத்திற்கு அப்போதைய ஆளுங்கட்சியான தெலுங்குதேசத்தின் மீது குற்றம்சாட்டினார். மேலும், ஜெகன்மோகன் ரெட்டி அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். உயிரிழந்த விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா தனது தந்தையின் மரணத்தில் அவர் உயிரிழந்த இடத்திற்கு முதலில் வந்த ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், சுனிதா ரெட்டி தனது தந்தையின் மரணத்தில் அவரது பழைய நண்பரான பரமேஸ்வர ரெட்டி மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்த விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரது மரணம் தொடர்பான மாநில போலீசாரின் விசாரணையில் திருப்தியில்லை என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், விரைவில் வழக்கை விசாரித்து முடிக்குமாறும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகளால் தொடங்க முடியவில்லை. கொரோனா பரவல் சற்று குறைந்தபிறகு அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுனில் யாதவ் கோவாவில் இருப்பதாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவாவில் இருந்த சுனில் யாதவை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, விவேகானந்த ரெட்டியின் மரணம் தொடர்பாக ஏன் சி.பி.ஐ.யிடம் விசாரணையை ஒப்படைக்கவில்லை என்று விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான நபரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம்.