ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் பெற்றது இந்தியாவின் மேலும் இரண்டு கடற்கரைகள்! முழு விவரம்
இந்தியக் கடற்கரைகளில் மேலும் இரண்டு கடற்கரைகளுக்கு உலகிலேயே சுத்தமான கடற்கரைக்கு வழங்கப்படும் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்தியக் கடற்கரைகளில் மேலும் இரண்டு கடற்கரைகளுக்கு உலகிலேயே சுத்தமான கடற்கரைக்கு வழங்கப்படும் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் கிடைத்துள்ளது. மினிகாய் துண்டி கடற்கரை, கடமத் கடற்கரை ஆகியனவற்றிற்கே இந்த அந்தஸ்து கிடைத்துள்ளன. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய தகுதியின் மூலம் இந்தியாவில் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது சிறப்பானது. வாழ்த்துகள். குறிப்பாக லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்துகள். இந்திய கடற்கரைகள் குறிப்பிடத்தக்கவை. அதை பேணுவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் பாராட்டத்தக்கது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மினிக்காய் தீவு (Minicoy)
மினிக்காய் தீவானது அரபுக்கடலில், லட்சத்தீவுக் கூட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. மினிக்காய் தீவின் மொத்த பரப்பளவு 4.22 சதுர கிலோ மீட்டர். உள்ளூர் மக்கள் மினிக்காய் தீவினை மாலிக்கு (Maliku) என்று அழைக்கின்றனர். இத்தீவின் நிர்வாகம், இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இலட்சத்தீவுக் கூட்டத்தில், மினிக்காய் தீவு இரண்டாவது பெரிய தீவாகும். மிகச் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தலமாகும்.
மாலத்தீவிலிருந்து 139 கிலோ மீட்டர் தொலைவிலும், இலட்சத்தீவிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மினிக்காய் மக்களின் முதன்மை தொழில் மீன் பிடித்தலும் படகோட்டுதலுமே.
மினிக்காய் தீவு மக்களின் நாகரீகம் மற்றும் கலாசாரம், இலட்சத்தீவு மக்களின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. ஆனால் மாலத்தீவு மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரீகம் மற்றும் கலாசாரத்திற்கு ஒத்துப் போகிறது. இம்மக்கள், மருமக்கதாயம் எனும் குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர்.
This is great! Congratulations, particularly to the people of Lakshadweep, for this feat. India’s coastline is remarkable and there is also a great amount of passion among our people to further coastal cleanliness. https://t.co/4gRsWussRt
— Narendra Modi (@narendramodi) October 26, 2022
கடமத் தீவு
கடமத் தீவு என்பதும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது அமினிதிவி தீவுக்கூட்டத்தில் உள்ள தீவு.
இந்த ஊரில் மக்கள் வாழ்கின்றனர். இந்த தீவின் வடமேற்கில் 67 கி.மீ தொலைவில் கவரத்தி உள்ளது. இந்த தீவுக்கு வெகு அருகில் அமினி தீவு உள்ளது. இங்கிருந்து கேரள நகரமான கொச்சி 407 கி.மீ தொலைவில் உள்ளது. அகத்தி தீவில் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு ஸ்கூபா டைவிங் வசதி உண்டு. இங்கு 50 பேர் தங்கும் வசதி கொண்ட விடுதியும் உண்டு.
இந்த இரண்டு கடற்கரைகளும் தான் ப்ளூ ஃப்ளாக் சான்றிதழை வாங்கியுள்ளன.
ப்ளூ ஃப்ளாக் சான்றிதழ் என்றால் என்ன?
உலகின் சுத்தமான கடற்கரை அல்லது படகு சுற்றுலாத்தளம் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. டென்மார்க்கை சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பால் இந்த விருது வழங்கப்படுகிறது. நீல கொடி (ப்ளூ ஃப்ளாக் ) சான்றிதழ் வழங்கும் முறை 1985ம் ஆண்டு ஃப்ரான்ஸில் துவங்கப்பட்டது. 2001ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற நான்கு முக்கிய அளவுகோளின் கீழ் நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.