Election Commissioners: 4 நாட்களில் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? கூடுகிறது பிரதமர் தலைமையிலான குழு
Election Commissioners: தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்கள் பதவிகள், மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Election Commissioners: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க விரைவில் பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூடுகிறது.
காலியாக உள்ள தேர்தல் ஆணையர்கள் இடம்:
இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அவருக்கு உதவியாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மொத்தம் 3 தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு பெற்றார். அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக அருண் கோயல் கடந்த வாரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 5, 2027 வரை இருந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்திற்கு அருண் கோயல் தேர்வாகியிருப்பார். அப்படி இருக்கையில் அவர் ஓய்வுபெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. அந்த பணியிடங்கள் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்படும் என தற்போது மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழு:
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தின்படி, சட்ட அமைச்சர் தலைமையில் 2 ஒன்றிய செயலாளர்கள் அடங்கிய தேடல் குழு 5 பெயர்களை தேர்வு செய்யும். பின்னர், பிரதமர் தலைமையில் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய தேர்வுக் குழுவானது, தேடல் குழு பரிந்துரைத்த 5 பேரிலிருந்து ஒருவரை பரிந்துரைக்கும். அந்த நபரை குடியரசு தலைவர் தேர்தல் ஆணையராக நியமிப்பார். அதன்படி, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான, பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுவானது, மார்ச் 14 அல்லது 15ம் தேதிக்குள் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு அசோக் லவாசா எனும் தேர்தல் ஆணையரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த லோக்சபா தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு விதமான விதி மீறல் முடிவுகள் குறித்து கருத்து வேறுபாடுகளை அவர் தெரிவித்து இருந்தார். முதலில், தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பதவி மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கொண்டுள்ளது. இரண்டு கூடுதல் ஆணையர்கள் முதலில் அக்டோபர் 16, 1989 இல் நியமிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் ஜனவரி 1, 1990 வரை மிகக் குறுகிய பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர். பின்னர், அக்டோபர் 1, 1993 இல், இரண்டு கூடுதல் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். பெரும்பான்மை வாக்குகளால் மூலம் சரியான முடிவுகளை எடுஒப்பதற்காக, பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் என்ற முறை செயல்பாட்டில் உள்ளது.