Loksabha Session: வரும் 18 ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர்? முழு விவரம்..
பிரதமர் மோடி நேற்று பதவியேற்றதையடுத்து வரும் ஜூன் 18 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
18வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 18 ஆம் தேதி கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் இரண்டு கூட்டத்தொடரையும் முறையாக தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேருவுக்கு பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் பெருமை மோடியையே சாரும். மோடியை தவிர, பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களாக மொத்தம் 71 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்று பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெரும் வகையில் 20,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான காப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கு பின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.