Meghalaya HC: 16 வயதினருக்கு உடலுறவில் ஈடுபடும் முடிவை எடுக்க திறன் உண்டு - நீதிமன்றம் சொன்னது என்ன?
16 வயதினருக்கு பாலியல் உறவில் ஈடுபடும் முடிவை எடுக்கும் திறன் உண்டு என்று மேகலாயா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மேகலாயா நீதிமன்றம் தற்போது பாலியல் வழக்கு ஒன்றில் வழங்கியுள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுமி:
மேகலாயாவில் 16 வயது சிறுமியின் தாயார் ஒருவர் தனது மகளை காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் பிரிவு 3 மற்றும் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மேகலாயா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் வாக்குமூலத்தில், தானும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 16 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், இருவரும் முழு சம்மதத்துடனே உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விசாரணையில், சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் தன்னுடைய காதலர் என்றே கூறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஆவணங்கள் மற்றும் இரு தரப்பு விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் மனுதாரருக்கு சாதகமாகவே ஆய்வறிக்கைககள் இருப்பதை ஒத்துக்கொண்டது.
முடிவெடுக்க உரிமை உண்டு:
இதையடுத்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “இந்த நீதிமன்றம் அந்த வயதினரின்( 16 வயது) உடல் மற்றும் மன வளர்ச்சியை கவனிக்கும். பாலியல் உறவின் உண்மையான செயலைப் பொறுத்தவரை அத்தகைய நபர் தனது நலன் குறித்து உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் என்பதை தர்க்கரீதியாக கருதும்” என்று கூறியுள்ளது.
மேகலாயா நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் மைனர்களாகவே கருதப்படுகின்றனர். இதன் காரணமாக அந்த வயதிற்கு கீழே திருமணம் செய்துகொள்வதும் சட்டப்படி குற்றமாகவே கருதப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ. 2000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்படுமா? - ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்..!
மேலும் படிக்க: Rajnath On Obama: ஒபாமாவை குறிவைக்கும் பாஜக தலைவர்கள்.. இஸ்லாமியர் விவரகாரம் - ராஜ்நாத் சிங் சரமாரி குற்றச்சாட்டு