மகன் வண்டி ஓட்டினால் அப்பாவுக்கு சிறை தண்டனை - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை
சாலை பாதுகாப்பிற்காக நாளை முதல் கூடுதல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால், தருமபுரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வினியோகம்.
நாடு முழுவதும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் செல்வதால், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் தீவிரமாக பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி செல்லும் பிள்ளைகள், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வதால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிடுகிறது. இதனை தடுப்பதற்காக கூடுதல் விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த கூடுதல் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் நாளை ஜூன் 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் சாலை பாதுகாப்பு விதிமுறையில் 18 வயது ஆகாமல், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வாகனம் கொடுப்பவர்களுக்கும் அபராதம். அவர்களின் பெற்றோர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை அடுத்து இன்று தருமபுரி நான்கு ரோடு பகுதியில் தருமபுரி நகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பிரசுரங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள், சமூக ஆர்வலர்கள் துண்டறிக்கை களை வழங்கி, விதிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். இதில் அப்போது 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால், அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல் 18 வயதுக்குட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், வாகனத்தின் உரிமையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் 18 வயது ஆகாதவர்கள் வாகனத்தை ஓட்டினால், அவருக்கு 25 வயது வரை வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு மற்றும் மைனரின் பெற்றோர்களுக்கு மூன்று வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை செய்து, துண்டறிக்கைகள் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், ரகுநாதன், காவலர்கள் விநாயகமூர்த்தி, கார்த்திக் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சுபாஷ், செல்வம், கிரி, மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.