கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை சம்பவம் - மேலும் ஓர் அதிர்ச்சி தகவலால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே என்சிசி முகாமிற்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி வளாகத்திலேயே தங்கி பயிற்சி எடுக்கும் மாணவி
அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்து தினமும் முகாமில் பங்கேற்றனர். இந்நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி கடந்த எட்டாம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணி அளவில் என்சிசி பயிற்சியாளர் ஆன காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30) என்பவர் அந்த பள்ளி மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை பள்ளிமுதல்வரிடம் தெரிவித்த மாணவி
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் இடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். அவர் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி இரவு அந்த மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். இதை அடுத்து அந்த மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் பருகூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்ஐ சூரியகலா விசாரணை நடத்தி போக்ஸோ பிரிவின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
சேலம் சரக டிஐஜி உமா நேரில் ஆய்வு
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி உமா கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வரான திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (30) பள்ளியின் ஆசிரியரான கந்திகுப்பம் இந்திரா நகரை சேர்ந்த ஜெனிஃபர் (35) பள்ளியின் தாளாளரான கந்திகுப்பத்தை சேர்ந்த சாம்சங் வெஸ்டலி (52) பயிற்சியாளர் ஆன தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுக்கா கொள்ளுப்பட்டி சக்திவேல் (39), கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்கா பேரிகை அருகே அமுத கொண்ட பள்ளி சிந்து (21 ) கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த சத்யா (21 ) பர்கூர் ஓரப்பம் அருகே சின்ன ஒரப்பம் சுப்பிரமணி (54) ஆகிய ஏழு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான சுப்பிரமணி முன்னாள் சிஆர்பிஎப் வீரர். தற்போது காவேரிப்பட்டினம் டிவிஎஸ் மில் ரோட்டில் வசித்து வருகிறார். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டினம் திம்மாபுரம் காந்தி நகரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆன சிவா என்கிற சிவராமன் (28) சுதாகரை செய்தனர். சிவராமன் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
சிவராமனை சுற்றி வளைத்த காவல்துறையினர்
இதை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று நேற்று மாலை அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். தனியார் பள்ளி என்சிசி முகாமில் எட்டாம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதற்கு பள்ளி தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் சகப் பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி பயிற்சியாளர் என்று யாரும் இல்லை. ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மட்டுமே என்சிசி பயிற்சியாளர் உள்ளார். என்சிசி பயிற்சியாளர் ஆக வேண்டும் என்றால் மத்திய அரசிடம் விண்ணப்பித்து அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த என்சிசி பயிற்சி மையம் சேலத்தில் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அணுகி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி அளிக்கலாமா என்கிற உத்தரவாதத்தை பெற்ற பிறகு தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் என்சிசி பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகு ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பயிற்சி அளிப்பார்கள். ஆனால் மேற்கண்ட சிவராமன் என்பவர் மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை இப்படி ஒரு நபரோ பயிற்சியாளரோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை. அவர் என்சிசி பயிற்சியாளர் என்று சொல்வது சரி இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.