கூசிக்கொட்டாயில் மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு - வட்டாட்சியருக்கு மனு அளித்த கிராம மக்கள்
பாலக்கோடு அடுத்த கூசிக்கொட்டாய் பகுதியில் மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜெர்த்தலாவ் ஊராட்சி, கூசிக் கொட்டாய் கிராமத்தில் இந்து, முல்லீம் என 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில், கரகூர், திருமல்வாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், மாரணடஹள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை என்பதாலும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சாலையை 24 மணி நேரமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் புதிததாக மதுக்கடை திறக்க அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து சரக்கு லாரியில் மதுபானங்களை எடுத்து வந்தனர். இதனை அறிந்த கூசிக்கொட்டாய், ஜெர்த்தலாவ் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து மதுபானகடை இந்த பகுதியில் திறக்காமல், வேறு இடத்திற்கு மாற்றினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசு மதுக்கடை கூசிக்கொட்டாய் பகுதியில் திறக்க கூடாது என 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றினைந்து பாலக்கோடு அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் மனு கொடுத்தனர். அப்போது கூசிக்கொட்டாய் பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என கிராமமக்கள் மனு அளித்தனர்.
இந்த பகுதியில் இந்து, முஸ்லீம், அனைவரும் ஒன்றாக சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம், இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் பெண்கள் தினமும் வேலை நிமித்தமாக வெளியே சென்று வருகின்றனர். இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால், பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடும். மேலும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும் எனவே இப்பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என வட்டாட்சியர் ஆறுமுகம், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தால், அங்கு மதுக்கடை திறக்கமட்டோம் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் மனு குறித்த மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மனு கொடுத்துவிட்டு கிராமமக்கள் திரும்பி சென்றனர். மேலும் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க இஸ்லாமியர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்திருந்தனர்.