தருமபுரி: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது அறுந்து விழுந்த கிரேன் ரோப்; தொழிலாளி உயிரிழந்த சோகம்
தருமபுரி அருகே விவசாய கிணறு ஆழப்படுத்தும் பணிக்காக, கிணற்றில் இறங்கியபோது, ரோப் அறுந்ததில், 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்.
![தருமபுரி: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது அறுந்து விழுந்த கிரேன் ரோப்; தொழிலாளி உயிரிழந்த சோகம் Dharmapuri news crane rope that fell off during the work of deepening the well worker death - TNN தருமபுரி: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது அறுந்து விழுந்த கிரேன் ரோப்; தொழிலாளி உயிரிழந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/07/4cf6dfd22fcde96467d2a824ae6617c81715075241649113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கோடை வெப்பம் வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் கோடை வெயில் தாக்கத்தால் விவசாய கிணறுகளில் தண்ணீர் முற்றிலுமாக வறண்டு உள்ளது. இதனால் விவசாய நிலங்களில் உள்ள பல்வேறு வகையான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்து கருகி வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் டேங்கர்கள் மூலமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது அதிகப்படியான செலவு விவசாயிகளுக்கு கொடுப்பதால் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் விவசாய நிலங்களில் ஆழ்துளை போர்வெல் அமைப்பது, கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், கிணறு வெட்டும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த கிணறு வெட்டும் பணியில் அதியமான் கோட்டை அடுத்த புறவடை பகுதியை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். சுமார் 75 சதவீதம் முடிந்த நிலையில் கம்ப்ரசர் போட்டு, மேலும் ஆழப்படுத்தும் பணி செய்ய, கிரேன் ரோப் மூலம் மாரியப்பன் மற்றும் அபிமன்னன் இருவரும் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் ரோப் அறுந்துள்ளது. அப்போது இரண்டு பேரும் சுமார் 70 அடி ஆழத்தில் இருக்கும் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் தவறி விழுந்ததில் மாரியப்பன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அபிமன்னனுக்கு தலை மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள், காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் (33) என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் அபிமன்னனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடும் வறட்சியால் விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது கிரேன் ரோப் அறுந்து விழுந்து, தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)