மழைக்காலம் வந்திருச்சு உடனடியாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுங்க - விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
விவசாயத்திற்கு அடுத்தபடியாக குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற கால்நடைகள் வளர்ப்பு மிக பிரதானமான தொழிலாக உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க இரண்டு லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
குடும்ப பொருளாதாரத்துக்காக வளர்க்கப்படும் ஆடு மாடுகள்
தர்மபுரி மாவட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவு, ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற கால்நடைகள் வளர்ப்பு மிக பிரதானமான தொழிலாக உள்ளது. இதனாலேயே மக்கள் அதிக அளவில் கால்நடைகளை விரும்பி வளர்க்கின்றனர்
தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஈடான கால்நடை வளர்ப்பு
மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு இணையாக ஆடு, மாடு, கோழிகள், வளர்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 600 பசு மற்றும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
அதேபோல் வெள்ளாடு 2,28,386, செம்மறி ஆடு 89 ஆயிரம், 313 பன்றிகள், 993 என மொத்தம் ஆறு லட்சத்து 65 ஆயிரத்து 292 கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இது தவிர கோழிகள் நாலு லட்சத்திற்கு மேல் வளர்க்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நாய், கழுதை, குதிரை என சுமார் 15 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்யும் மழை
நடப்பாண்டு தென்மேற்கு பருவ மலையை ஒட்டி தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் கோடை வெயிலைப் போன்று சுட்டு எரிக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்கிறது. இந்த சீதோசன நிலை மாற்றத்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதை அடுத்து தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கையாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 3.47 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இந்த பசு மாடுகளுக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோயினை கட்டுப்படுத்தும் விதமாக தர்மபுரி மாவட்டத்தில் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் 30ஆம் தேதி வரை 2 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது.
மாவட்ட உள்ள எல்லைபுற மற்றும் கிராமங்களிலும் நோய் தாக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போட்டு நோய்களிடமிருந்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும்
இந்த நோயானது குறிப்பாக பசுக்களை தாக்குகிறது. நோய் தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல் மற்றும் இறை உண்ணாது இருத்தல், தண்ணீர் குறைவாக குடித்தல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும். நோய் வாய்ப்பட்ட பசுக்களின் தோளின் மேல் சிறு கொப்பளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோடு, புண்களோடு ஏற்படும் இந்த நோய் கால்நடைகளை தாக்காமல் இருக்க ஆடு, மாடு, பசு போன்ற கால்நடைகளை வளர்ப்போர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கால்நடைகளை நோய் தாக்கத்திலிருந்து விவசாயிகள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.