மழை வேணும்னா! அரசு நிலத்தை மீட்டு மரம் நடுங்க - அதிரடி காட்டிய ஆட்சியர்
பென்னாகரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 200 மரக்கன்றுகளை நட்டு வனத்தை உருவாக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள் இருந்து வருகிறது. இதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார் தரிசு நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால், கடுமையான வெப்பம் வீசியதாலும், மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தரிசு நிலங்களை கண்டறிந்து, அந்த இடங்களை மீட்டு மரக் கன்றுகள் நட்டு, வனங்களை உருவாக்க வேண்டும், வருங்காலங்களில் மழை இல்லை, வறட்சி, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அதிக அளவு மரக் கன்றுகளை நட்டு மழை பெற வேண்டும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரசு நிலத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. இதில் பென்னாகரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள தரிசு நிலத்தை அடையாளம் கண்டு முற்றிலுமாக முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 200 மரக்கன்றுகள் நட்டு வனத்தை உருவாக்கும் பணியினை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி மரக் கன்று நட்டு தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், இந்த இடத்தில் புங்கன், வேம்பு, ஆலமரம், நாவல், பாதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இந்த வனத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலமாக தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்து பெரிய வனமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் இருவருக்கும் அறிவுறுத்தினார். மேலும் அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து பார்க்கின்ற பொழுது இந்த இடம் பெரிய வனமாக மாறி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர், 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.