அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற நீதிபதியின் மகள்-பாராட்டி தங்க காயின் கொடுத்த முன்னாள் அமைச்சர்
பாலக்கோடு அரசு பள்ளியில் +2 தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு 8 கிராம் தங்க காசு வழங்கி பாராட்டிய முன்னாள் அமைச்சர் அன்பழகன்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த, பாலக்கோடு நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதியின் மகள் ஸ்ருதி என்ற மாணவி, மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
மாணவி ஸ்ருதி தமிழில் - 98, ஆங்கிலத்தில் 96, இயற்பியல் 100, வேதியியல் 100, தாவரவியல் 98, கணிதவியல் 98 என மொத்தம் 600க்கு 590 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசியர்களை பாராட்டினார். இதனையடுத்து அரசு பள்ளியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ருதிக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கி பாரட்டி, வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவிகளுக்கு நன்றாக படம் கற்பித்த ஆசிரியர்களை பாராட்டி புத்தகம் பரிசு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ”தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஸ்ருதி என்ற மாணவி அரசு பள்ளியில் அளவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதில் 600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்று இந்த அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
எந்த பள்ளியில் படித்தாலும்,நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களை பாராட்ட வேண்டும். வருங்காலங்களில் அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைக்க வேண்டும். இதற்கு அரசு பள்ளியில் படிக்கின்ற மற்ற மாணவிகளும், ஆசிரியர்களும் நன்றாக உழைத்து அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பு என்பது ஒரு எட்டா கனியாகவே இருந்து வந்தது. ஆனால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு பெற்று கொடுத்ததன் மூலம் தமிழ்நாட்டில், தர்மபுரி மாவட்டத்தில் தான் அதிகப்படியான மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவ படிப்பிற்கு செல்கிறார்கள் என்ற பெருமையை பெற்று இருக்கின்றோம். இதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். எனவே அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் இதனை மனதில் நிறுத்திக் கொண்டு, நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இந்த மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு எட்டு கிராம் தங்க காசு வழங்கப்படுகிறது.
இதே போலவே எல்லா மாணவிகளும் நன்றாக படித்து மதிப்பெண் பெற வேண்டும் என மாணவிகளையும், ஆசிரியர்களையும் வாழ்த்தி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்