தருமபுரியில் கனமழையின்போது வீசிய சூறைகாற்று... ஒரு பெண், 11 ஆடுகள் உயிரிழப்பு
தருமபுரியில் 3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழையின் போது சூறை காற்று வீசியதில், வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் விழுந்ததில் பெண் மற்றும் 11 ஆடுகள் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் வீசி வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 108.5 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் விவசாய பயிர்கள் முழுவதுமாக தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வந்தது. கோடை காலம் தொடங்கி நிலையில் கோடை மழை பொழியாத என்ற ஏக்கத்தில் மக்கள் காத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை சூறைக் காற்றுடன் பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு, தருமபுரி, காரிமங்கலம், மொரப்பூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் கிராமப் புறங்கள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
அப்பொழுது காரிமங்கலம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையால் கோடியூர், சென்றாயம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆடு மேய்த்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த முனியப்பன் மனைவி கோவிந்தம்மாள் (55), துளசி (65), மகேஸ்வரி (45) ஆகியோர், அருகேயுள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். அப்பொழுது காற்றின் வேகத்துக்கு திடீரென கொட்டகையின் மேலிருந்த தகர ஷீட் பறந்து வந்து, நின்று கொண்டிருந்த 3 பெண்கள் மீது விழுந்ததில், படுகாயமடைந்த கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த துளசி, மகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அப்பொழுது சுவர் இடிந்து விழுந்ததில், கொட்டகையில் மழைக்காக இருந்த 7 ஆடுகளும் இடுப்பாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல், அரூர் அடுத்த பையர்நாய்க்கன்பட்டி பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில், 4 ஆடுகள் உயிரிழந்தது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தொடர் மழையால், சூறைக்காற்றுடன் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.