தருமபுரியில் மன்றோவுக்கு பூங்கா அமைத்த ஆட்சியர் - யார் இந்த சர் தாமஸ் மன்றோ?
தருமபுரியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த அதிகாரி சர் தாமஸ் மன்றோ நினைவுத் தூண் பழமை மாறாமல் புதுப்பித்து, சிறிய பூங்கா அமைப்பு.
தருமபுரியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த அதிகாரி சர் தாமஸ் மன்றோ நினைவுத் தூண் பழமை மாறாமல் புதுப்பித்து, சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ வீரராக சேர்ந்து சென்னை மாகாணத்தின் கவர்னராக பதவி உயர்வு பெற்ற சர் தாமஸ் மன்றோ, 1792 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை தருமபுரி, சேலம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாரா மஹால் பிரதேசத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார். தருமபுரியில் 7 ஆண்டு காலம் பணிபுரிந்து வந்த நிலையில், விவசாயிகள் நலனுக்காக அவர்களிடத்தில் நிலத்திற்கு வசூல் செய்யப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் ரயத்துவாரி வரி விதிப்புமுறை அமலுக்கு வந்தது. மேலும் வரி வசூலிக்க கலெக்டர் என்ற நிர்வாக பதவி முதன் முதலில் உருவாக்கியவர் மற்றும் நவீன கல்வி முறைக்கு முன்னோடியாக திகழ்ந்த சர் தாமஸ் மன்றோ. பெண் கல்விக்கு வித்திட்டவர். தருமபுரியில் பல கிராமங்களுக்கு நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
பெருவழி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயிலின் பின்பகுதியில், சுமார் 225 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்யும் பயணிகளுக்கு, குடிநீர் வழங்க அங்கே குளம் வெட்டியுள்ளார். இவர் அமைத்த குளம் மன்றோ குலம் என்று இவருடைய சிறப்பை போற்றும் வகையில் அழைக்கப்பட்டு வருகிறது.
சார் தாமஸ் மன்றோவின் சிறப்பையும் புகழையும் நினைவுப்படுத்தும் வகையில் தர்மபுரி திருப்பத்தூர் சாலையில், சந்தப்பேட்டையில் பிரிவு ரோடு அருகே நினைவுத்தூன் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நினைவுத் தூண் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்து மன்றோவின் பெயர் வெளியில் தெரியாத அளவிற்கு இருந்து வந்தது.
இதனை அடுத்து சர் தாமஸ் மன்றோவின் சிறப்பையும், புகழையும் நினைவுபடுத்தும் அந்த நினைவுத் தூணை பழமை மாறாமல், நகராட்சி நிர்வாகம் சார்பில் புதுப்பித்து, அந்த இடத்தை புணரமைத்தனர். மேலும் சிறிய பூங்கா அமைத்து அதில் சர் தாமஸ் மன்றோவின் பெயர் பலகை அமைத்துள்ளனர்.
இதனை அடுத்து புதுப்பிக்கப்பட்ட சர் தாமஸ் மன்றோ நினைவு தூணை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேரில் ஆய்வு செய்து, சார் தாமஸ் மன்றோவின் புகழ் கல்வெட்டினை திறந்து வைத்தார். அப்பொழுது நகராட்சி தலைவர் லட்சுமி ஆணையாளர் புவனேஸ்வரன் கிட்ட கலந்து கொண்டனர்.
இதன் மூலம் சர் தாமஸ் மன்றோவின் சிறப்பையும், புகழையும் வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்த முடியும். இந்த தூண் பழமை புதுப்பிக்கப்பட்டு சிறிய அளவிலான பசுமை புல்வெளியுடன் சிறிய பார்க் அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.