கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு எதிரொலி: காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு எதிரொலியால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு-
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு எதிரொலியால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிவு-வினாடிக்கு 1.05 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக குறைந்தும் வெள்ளப் பெருக்கு.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருவி இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு உபரிநீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் காவேரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனல் கடந்த சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் சுமார் 15 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, தீவுப் போல காட்சியளித்து வந்தது. மேலும் ஒகேனக்கல்-ஓசூர் பிரதான சாலையில், நாடார்கொட்டாய் 50 அடி தூரத்திற்கு, தண்ணீர் தேங்கி, சாலை மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 90,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியிலிருந்து, இன்று காலை வினாடிக்கு 75,000 கன அடியாக குறைந்துள்ளது. ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், காவிரி ஆற்றில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 21-வது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று ஆடி ஆமாவாசை நாளில் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, நீராடி முடியாமல் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார்கொட்டாய், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.