"முன்னாள் அமைச்சர் அன்பழகன் 1996-ல் வந்தவர், ஆனால், நாங்கள்”.... பாசறை நிர்வாகி பேச்சால் பரபரப்பான கூட்டம்
தருமபுரியில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு இரண்டு கோஷ்டிகளுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனைப்படி தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள அரங்கநாதன்- ரஞ்சிதம்மாள் திருமண மண்டபத்தில் இன்று நண்பகலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும் கே.பி.அன்பழகன் முன்னிலையில், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைக கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.
கட்சியின் வளர்ச்சி குறித்து வாசிக்கப்பட்ட தீர்மானம்
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வருகின்ற உள்ளாட்சி தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் குறித்து ஆலோசனைகள் மற்றும் வெற்றி பெறுவதற்கான அறிவுரை வழங்கினர்.
நிர்வாகிகளின் ஆலோசனை
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகிகளாக பேச அழைத்தனர். மேடையில் பேசிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டது தோல்வி குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது தர்மபுரி மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் பேசினார்.
முன்னாள் அமைச்சரை சாடிய பாசறை தலைவர்
தேர்தல் குறித்தும், வெற்றி குறித்து பேசி கொண்டிருந்த சங்கர், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 1996 இல் தான் அதிமுகவிற்குள் வந்தவர் நாங்கள் எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அதிமுகவில் இருந்து வருகிறோம். ஆனால் 96 இல் வந்த அன்பழகன் எல்லா பொறுப்புகளையும் வைத்துக் கொண்டார். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று கூறினார். அப்பொழுது திடீரென குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் அன்பழகன், நான் எப்பொழுது கட்சிக்கு வந்தேன் என்று கட்சியில் இருக்கும் மூத்தவர்களை கேட்டு தெரிந்து கொள்.
கூட்டத்தில் தள்ளுமுள்ளு
இது போன்று பேசக்கூடாது எனக் கூறி, சங்கரை உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கும்படி கூறினார். அப்பொழுது சங்கரின் உறவினரான அதிமுக மாநில விவசாய பிரிவு அமைப்புச் செயலாளர் டி.ஆர்.அன்பழகன், எதிர்ப்பு தெரிவித்து சங்கருக்கு ஆதரவாக பேசினார். இதனால் டி. ஆர். அன்பழகன், மாவட்ட செயலாளர் கே. பி. அன்பழகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருமையில் பேசினர்.
இதனை அடுத்து இரண்டு கோஷ்டிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மேடையின் கீழ் இருந்த தொண்டர்கள் மேடையின் மீது ஏறி அனைவரும் முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் சமரசம் ஆகி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.