நேற்று கான்ஸ்டபிள்... இன்று ஏசி... யாருப்பா இந்த ஆறுச்சாமி!
டெல்லியில் கான்ஸ்டெபிளாக இருந்த ஃபெரோஸ் ஆலம் என்பவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உதவி காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். அலறவிட்ட இந்த டெல்லி ஆறுச்சாமி தான் போலீஸ் வட்டாரத்தில் இப்போதைக்கு டாக் ஆப்தி டவுன்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாத்தல்லோக் இணைய தொடரில் டெல்லி கான்ஸ்டெபிளாக இருந்து ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் கதாரப்பாத்திரமான இம்ரான் அன்சாரி கதாபாத்திரத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது டெல்லி காவல்துறையில் நடந்துள்ளது. டெல்லி காவல்துறையில் கான்ஸ்டெபிளாக பணியாற்றிய ஃபெரோஸ் ஆலம் என்பவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உதவி காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டம் பில்குவா நகரில் இரும்புத் துகள் வியாபாரியின் மகனாக பிறந்தவர் ஆலம். பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும்போதே தனக்கு இரண்டு கனவுகள் இருந்ததாக கூறும் ஆலம். போலீஸ் ஆக வேண்டும் என்பது முதல் கனவாகவும் பின்னர் போலீஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பது இரண்டாம் கனவாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் 2010ஆம் ஆண்டில் டெல்லி கான்ஸ்டெபிளாக தேர்வாகி தனது முதல் கனவை நனவாக்கிய ஆலம். ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது இரண்டாவது கனவை நனவாக்க 10ஆண்டுகள் தேவைப்பட்டதாக குறிப்பிடுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வை எழுதிய நிலையில் அதன் முடிவுகள் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி வெளியானது. நாடு முழுவதும் 8 லட்சம் பேர் எழுதிய சிவில்சர்வீஸ் தேர்வில் ஆலம் 645ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது குறித்து விவரிக்கும் ஆலம் 30 வயதாகும் தனக்கு ஒரு நிமிடம் கூட வீணக்கிவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக கூறுகிறார். தனது கடமையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களும் பணியில் இருந்தவர்களும் நிறைய ஒத்துழைப்பு தந்ததாக கூறும் ஆலம். முதன்முறையாக உதவி காவல் ஆணையருக்கான சீருடையை அணிந்தபோது அதில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து ஆச்சர்யங்கள் அடைந்ததாக கூறுகிறார்.
டெல்லியில் தன்னோடு பணியாற்றும் கான்ஸ்டெபிள்களும் யுபிஎஸ்சி தேர்வை வெல்வதற்காக தனியாக வாட்சப் குழுவை தொடங்கி உள்ளதாக கூறும் ஆலம், 58 பேர் வரை யுபிஎஸ்சி தேர்வெழுத தயாராகி வருவதாகவும் அதில் சிலர் மெயின் தேர்வை முடித்துவிட்டதாகவும் மேலும் சிலர் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் குறிப்பிடுகிறார். டெல்லி காவல்துறையில் 46,000 காவலர்களில் ஒருவராக இருந்த நபரின் வாழ்க்கை தற்போது எப்படி மாறிவிட்டது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஆலம். சில நேரம் அது தனக்கு கூச்ச உணர்வை தருவதாகவும், அதுவரை தன்னை கான்ஸ்டெபிள் என்றும் சகோதரர் என்றும் அழைத்துவந்தவர்கள், தற்போது சார் என அழைப்பதே அதற்கு காரணமாக கூறும் ஆலம், அதற்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை என்கிறார்.