கூடலூரில் அதிகரிக்கும் மனித - வனவிலங்கு மோதல்கள் : மோதல்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கூடலூர் பகுதியில் மனித வனவிலங்குகள் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களை தடுக்கும் வகையிலும், சூழலியலை பாதுகாக்கும் வகையிலும் சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குவதால் பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். நேற்றைய தினம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நான்சி என்ற 3 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. சிறுத்தையை உடனடியாக பிடிக்க கோரி அப்பகுதி மக்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
கூடலூர் பகுதியில் மனித வனவிலங்குகள் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்களை தடுக்கும் வகையிலும், சூழலியலை பாதுகாக்கும் வகையிலும் கருவி அறக்கட்டளை நிறுவனர் ஜான் சிரில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”முதலில், தேயிலை பயிரிடும் பரப்பை குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டதோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். வனப்பகுதிக்குள் வசித்தாலும் கூட, வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசே வீடு கட்டித் தர வேண்டும்.
நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகள், நிறுவனங்கள், வீடுகள், வேளாண் நிலங்கள் இருப்பின் அவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். வீடுகள் இழக்கும் ஏழைகளுக்கு பகுதிகளில் வீடு ஒதுக்கித் தரலாம். நீலகிரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா விடுதிகளுக்கோ, தோட்ட விரிவாக்கத்திற்கோ அனுமதி தரக்கூடாது. பாதுகாக்கப்பட்ட நிலங்களாக உள்ள “பிரிவு 17” வகை நிலங்களில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், இவ்வகை நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனங்களை அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும்.
சாலை வளைவுகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, கான்க்ரீட் பலப்படுத்தும் முறைகளை மட்டும் கையாளாமல், மண்ணை இறுக்கமாக்கும் மரங்களை நட்டு வளர்க்கும் பணியையும் வனத்துறை மேற்கொள்ள வேண்டும். மலையையொட்டி சாய்வான பகுதிகளில் கட்டுமானங்கள் தடுக்கப்படவேண்டும். இவற்றை மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்து வரும் சிகை, உண்ணி போன்ற களைத் தாவரங்களை அகற்றி, விலங்குளுக்கான உணவாக உள்ள புற்களை வனத்துறையே நடவு செய்ய வேண்டும். புற்கள் மேயும் வனவிலங்குகள் நகர பகுதியில் உதவுவது குறையும். வேட்டை விலங்குகள் உணவுக்காக மனிதர்களை தாக்குவது குறையும்.
இம்மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவத்தையும் இம்மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைத்து, வளரும் தலைமுறையினரிடம் இதைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். வரைமுறையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை வரம்புக்குள் கொண்டு வர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் உள் அனுமதிச் சீட்டு (Inner Line Permit) முறையைக் கொண்டு வர வேண்டும். நெகிழிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். நீலகிரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், இப்பகுதியை சுற்றுலா மண்டலமாகப் பார்க்காமல் உயிர்ச்சூழல் மண்டலமாகப் பார்க்கும் பொறுப்புணர்வுடன் இங்கு வர வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திற்குள் மண்ணின் பழங்குடியினர், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பூர்வகுடி மக்கள் தவிர்த்து பிறர் இங்கே குடியேற நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு வன அமைச்சர், செயலர் நேரில் வந்து பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேற்சொன்ன கோரிக்கை விரைந்து செயல்படுத்தினால், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழலியல் பேராபத்திலிருந்தும் நீலகிரி மலைமகளைப் பாதுகாக்கலாம்” எனத் தெரிவித்தார்.