புதிய வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
சத்தம் கேட்டு அவரை காப்பாற்றுவதற்காக தண்ணீர் தொட்டியின் மேல் நின்றிருந்த கட்டிட மேஸ்திரி குமார் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.
கோவை உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். 47 வயதான இவர் அப்பகுதியில் 1750 சதுர அடி பரப்பளவில் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமான பணியினை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த குமார் (29) என்ற கட்டிட மேஸ்திரி தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கட்டிடத்தின் அருகில் தற்காலிக செட் அமைத்து தங்கி கூலி வேலை செய்து வரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (27) என்பவர், வீட்டின் தண்ணீர் தொட்டி உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் மரப்பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
இதற்காக 7 அடி உயரம் கொண்ட 2 அடி தண்ணீருள்ள தொட்டியில் இறங்கிய போது, மின்சாரம் தாக்கி சத்தம் போட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு அவரை காப்பாற்றுவதற்காக தண்ணீர் தொட்டியின் மேல் நின்றிருந்த கட்டிட மேஸ்திரி குமார் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது குமார் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் இருவரும் சத்தம் போட்டு உள்ளனர். அருகில் கட்டிட பணிகளை மேற்கொண்ட நபர்கள் உடனே மின்சாரத்தை துண்டித்து, கீழே இறங்கி பார்க்கும் போது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். பின்னர் கட்டிட பணிகளை மேற்கொண்டவர்கள் அவர்கள் இருவரையும் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து வந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரது உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் 5 அடி தூரத்தில் வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ளதும், அதில் இருந்து மின்சாரம் தண்ணீர் தொட்டிக்குள் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் இருவரது உடல்களையும் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது உயிரிழப்பிற்கு வேறு எதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய வீடு கட்டுமானத்தின் போது இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.