நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ளது, கோவை குற்றாலம். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கோவை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை வலுபெற்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலத்திற்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான உகந்த சூழல் வந்ததும் கோவை குற்றாலம் திறக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் மழை குறைந்தன் காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க உகந்த சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.