(Source: ECI/ABP News/ABP Majha)
கோவையில் பரபரப்பு.. வெள்ளியங்கிரி மலையேறிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு ; பக்தர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
பக்தர்கள் இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் மலையில் தற்கால மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளனர். அங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலை ஏறிய பக்தர்கள் இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்துனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டு உள்ளதாக கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்றபோது பாண்டியன் உயிரிழந்து இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆண்டுதோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒரே நாளில் வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.