Tamil Nadu Coronavirus: கொங்கு மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!
இந்த சுற்றுப்பயணம் முழுக்க அரசு அலுவல் சார்ந்த பயணம் என்பதால் திமுகவினர் தம்மை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள வரும் தமக்கு வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சேலம், திருப்பூர், கோவை, திருச்சி. மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் சேலத்திற்கு செல்லும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் சேலம் இரும்பு ஆலை வளாகத்திற்குள் சென்று அங்கு உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை பார்வையிடுகிறார். பின்னர், அங்கிருந்து திருப்பூர் செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணம் முழுக்க அரசு அலுவல் சார்ந்த பயணம் என்பதால் திமுகவினர் தம்மை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள வரும் தமக்கு வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க,ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், கொடிகள் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
கடந்த 7-ஆம் தேதி ராஜ்பவனில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதல் கையெழுத்தாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவதற்கான கையெழுத்தை போட்டார். இதில், ரூ.2 ஆயிரம் வீதம் முதல் தவணையாக இந்த மாதத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது.
இதன்பிறகு, தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 11ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் குறைந்த நிலையில், கூடுதல் வசதிகளை உருவாக்கவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
‘கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும். மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டதுடன், ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ஆம் தேதிக்குள் விருப்ப கருத்துகளை கேட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்தார்.
தடுப்பூசியை தயாரித்து அளிப்பதற்காக சர்வதேச அளவிலான டெண்டர்க்கான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,