மாணவிகளை வீடியோ கால் வர சொன்ன ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
”மாணவிகளுக்கு மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டி ஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்டார். வீடியோ காலில் டிரெஸ் இல்லாமல் வருகிறார்.”
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகளும், வழக்கமான வகுப்புகளும் நடைபெற்று நிலையில், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை அளிப்பது தொடர்பாக மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இந்நிலையில் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு வருகை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மாணவ, மாணவிகள் அதிருப்தி அடைந்தனர். ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவ, மாணவிகள் பள்ளியின் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், ”கம்யூட்டர் கிளாஸ்க்கு போகும் போது ஆசிரியர் விஜய் ஆனந்த் மாணவிகளை தேவை இல்லாமல் தொட்டுத் தொட்டு பேசினார். மாணவிகளுக்கு மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டி ஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்டு ஆபாசமாக பேசினார். வீடியோ காலில் டிரெஸ் இல்லாமல் வருகிறார். பாடங்களை தாண்டி மாணவிகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் கூறினார். வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் தொல்லை அளித்தார். இது குறித்து வெளியே சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டினார். ஆசிரியர் விஜய் ஆனந்த் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்