கோவை பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது மேலும் ஒரு வழக்கு
கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட 6 பேர் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். ஆ.ராசாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க கோரி பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தின.
இதனிடையே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கடந்த செப்டர்ம்பர் 18ம் தேதியன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா, பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்த புகாரின் பேரில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் பாலாஜி உத்தமராமசாமி அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, பாலாஜி உத்தம ராமசாமி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பீளமேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது பாஜகவினர் சிறை முன்பாக திரண்டு மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். மேளம் அடிக்க காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சிறையில் இருந்து வந்த பாஜக நிர்வாகிகளை வரவேற்க அனுமதியின்றி சட்ட விரோதமாக அக்கட்சியினர் திரண்டு மேளதாளம் அடித்ததாக, பந்தயசாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட 6 பேர் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு சிறையில் இருந்து வந்தவர்களை வரவேற்கும் வகையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்தாக காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ராஜ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஸ்ரீ சேதாத்ரி என்ற பாஜக நிர்வாகி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்