’விடைபெற்றது ஓடும் ரயிலின் பாடும் குயில்’ - டிக்கெட் பரிசோதகர் வள்ளிக்கு பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பிய பயணிகள்..!
மலை இரயிலின் பயணத்தின் ஊடாக தனது இனியமையான குரலில் பாடல்களை பாடி சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது வள்ளியின் வழக்கம். அதன் காரணமாக ’ஓடும் இரயிலின் பாடும் குயில்’ என பயணிகளால் அழைக்கப்பட்டு வருகிறார்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான மலை இரயில் 122 வயது பழமையானது. கடந்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த மலை இரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த இரயில் பயணிகளுக்கு தரும். இந்த இனிமையான பயணத்திற்கு டிக்கெட் பரிசோதகரான வள்ளியின் இனிமையான பாடல்கள் மேலும் அழகூட்டும்.
மலை இரயிலின் பயணத்தின் ஊடாக ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக வந்து தனது இனியமையான குரலில் பாடல்களை பாடி சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது வள்ளியின் வழக்கம். அதன் காரணமாக ’ஓடும் இரயிலின் பாடும் குயில்’ என பயணிகளால் அழைக்கப்பட்டு வருகிறார்.
58 வயதான வள்ளி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள சொர்னுாரில் பிறந்தவர். இவரது தந்தை ரயில்வேயில் பணியாற்றிய நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு ரயில்வேயில், துப்புரவு பணியாளராக சேர்ந்தார். பின்னர் 46வது வயதில் டிக்கெட் பரிசோதகர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர். கடந்த ஆறு ஆண்டுகளாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயிலில் பணி புரிந்து வந்தார். தனது வழக்கமான பணியுடன் சினிமா பாடல்களை பாடி அசத்தும் வள்ளிக்கு என சுற்றுலா பயணிகளில் தனி ரசிகர்களும் உண்டு. மேலும் ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு அடுத்தடுத்து வரும் இடங்களை முன்கூட்டியே தெரிவிப்பார். அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி, எங்கு பாலம் வரும், எங்கு அருவி வரும், எந்த இடம் புகைப்படம் எடுக்க சரியான வியூ பாயின்ட் போன்ற தகவல்களைத் தெரிவித்து வந்தார். இதனால் சுற்றுலா பயணிகளிடம் வள்ளி பிரபலமாக அறியப்பட்டார்.
இந்நிலையில் நேற்றுடன் வள்ளி தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் வள்ளிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற வள்ளிக்கு, இரயில்வே நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அப்போது பயணிகள் வள்ளிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ரோஜா மலர்களையும், நினைவுப் பரிசுகளையும் வள்ளிக்கு வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட வள்ளி கண்ணீர் மல்க அவற்றை பெற்றுக் கொண்டார். இரயில்வே பணியார்களும், சுற்றுலா பயணிகளும் வள்ளியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.