நீலகிரி, மசினகுடி வனப்பகுதியில், தேடப்பட்டு வந்த T-23 புலி பிடிபட்டது..! (Watch Video)
நேற்றிரவு முதல்முறையாக, இரவு 10 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டிருந்தது.
Tiger T23 in Mudumalai Tiger Reserve captured.
— Apoorva Jayachandran (@Jay_Apoorva18) October 15, 2021
Finally after a massive 22-day-long effort by the forest department, the animal has been tranquilized and captured. #MDT23 #mudumalai #Tiger #masinagudi pic.twitter.com/uSij64UrCm
நீலகிரி, மசினகுடி வனப்பகுதியில், தேடப்பட்டு வந்த T-23 புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டும் தப்பிய டி-23 புலியை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வுடன் காணப்படும் என்பதால் 21-ஆவது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும், ஊர் மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வந்தது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவரையும், சிங்காரா பகுதியில் மங்கள பசவன் என்பவரையும் அடித்துக் கொன்றது. ஏற்கனவே இரண்டு பேரை புலி தாக்கி கொன்ற நிலையில், டி 23 புலியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.
புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் புலி பிடிபடாமல் சுற்றி வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் அடிக்கடி புலியை பிடிக்கும் வியூகங்களை மாற்றிவந்தனர்.
முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர் மண்டி காணப்படும் சரணாலயம் என்பதாலும், அதிகளவிலான புலிகள் அப்பகுதியில் இருப்பதாலும் டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் ஏற்பட்டன. மேலும் தொடர் மழை காரணமாகவும் புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் டி 23 புலி போஸ்பாரா வனப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று டி 23 புலி பதிவாகியது. அப்புலியை நேரடியாக வனத்துறையினர் பார்த்து 8 நாட்களுக்கு பின்னர், மீண்டும் புலி கேமராவில் பதிவாகியது. இதையடுத்து போஸ்பாரா சுற்றுவட்டார பகுதிகளில் புலியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனிடையே நேற்று லிங்கனகள்ளியில் இருந்து போஸ்பாரா செல்லும் வழியில் புலியை வனத்துறையினர் கண்டனர். அங்கு புதரில் இருந்த துப்பாக்கியில் மயக்க ஊசியை பொருத்தி புலி மீது சுட்டனர். ஆனால் புலி புதருக்குள் மறைந்து தப்பியோடியதால், அது தோல்வியில் முடிவடைந்தது.மீண்டும் தப்பிய டி 23 புலியை பிடிக்கும் பணியில் இன்று 21ஆவது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் டி-23 புலி பிடிபட்டுள்ளது, மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது