Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முகமது ஆசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்டமாக முகமது ஆசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகமது அசாருதீனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு பென் டிரைவில் ஒரு வீடியோவில் ஜமேசா முபீன் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தி கொண்டு, தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த வேண்டுமென பேசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இலங்கை ஈஸ்டர் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 260 பேரைக் கொல்ல காரணமாக இருந்த இஸ்லாமிய மதகுரு சஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் முபீன் ஈர்க்கப்பட்டவர் எனவும், இஸ்லாமிய ஸ்டேட் ஆஃப் கொராசன் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஜமேசா முபீனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கையால் எழுதப்பட்ட குறிப்புகளில் இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், இரயில் நிலையம், கோவில்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களை இலக்குகளாக குறித்து இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முபீனுக்கு அவரது நண்பர்களான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் உதவியதாகவும், தல்ஹா காரினை வாங்கி தந்ததாகவும், பெரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்களை காரில் ஏற்ற உதவியதாகவும், முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சார் வெடி பொருட்கள் வாங்கி கொடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மீதமுள்ள 5 பேர் மீதும் விரைவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.