இந்து சமய அறநிலையத்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோவில்களைப் பாதுகாக்கவும், தொடர்ந்து நடத்தவும் முழு அதிகாரம் அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தான் உண்டு. தனியாருக்கு ஒப்படைக்கப்படுமென்ற கருத்து எள்ளவும் நுழையவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
கோவை விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக, மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கூட பாராட்டும் வகையில் நடைபெறுகிறது. இதனைக் காண ஆன்லைன் புக்கிங்கில் 52 ஆயிரம் பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதில் இன்று 2 ஆயிரம் பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோவில் மேல் தளத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு 6 ஆயிரம் பேர் மட்டுமே நிற்க முடியும் என கூறியதால் தான், அதிகளவிலான பக்தர்களை அனுமதிக்க முடியவில்லை.
எல்.இ.டி. திரை மூலம் கும்பாபிஷேகத்தை 16 இடங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 90 அக்னி குண்டங்களில், 33 அக்னி குண்டங்களில் தண்டாயுதபாணிக்கு மட்டும் அர்ச்சணைகள், வேள்விகள் நடத்தப்பட்டது. இந்த ஆட்சியில் 444 திருக்கோவில்களில் குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்று 31 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. அடுத்த மாதம் 24 ம் தேதி வரை 179 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் அரசு மானியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான 104 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் நடைபெறுவது போல இந்து சமய அறநிலைய துறை பணிகள், வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை.
பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் குட முழுக்கில் ஓதுவர்கள் மூலம் தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டது. தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புபடி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அதனை எப்படி செய்வது என பரிசீலணை செய்து அரசிற்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில் கூடிய விரைவில் அரசாணை வெளியிடப்படும். அர்ச்சகர் பள்ளி போல குட முழுக்கு தமிழில் செய்ய தமிழ் பயிற்சி பள்ளி துவங்கப்படும்.
இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 3964 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடரும். கோவில்களுக்கு சொந்தமான 3 இலட்சத்து 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. நில அளவீடு முடிந்து கோவில் நிலம் என்ற விளம்பர பலகை வைக்கப்படும். ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் 26 யானைகள் உள்ளன. அவைகளுக்கு குளியல் தொட்டி, 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசணைப்படி உணவு, நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வசதிகள் முன்பு இல்லாததால் புத்துணச்சி முகாம் தேவைப்பட்டது. தற்போது யானைகள் மகிழ்ச்சியோடு இருக்க தேவையான கட்டுப்பாடுடன் உணவு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதால் புத்துணர்ச்சி முகாம் தேவையற்ற ஒன்றாகிவிட்டது.
பல திருக்கோவில்கள் மன்னர்கள் காலத்தில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் தான் அதற்கு முழு பொறுப்பு. அந்த வகையில் இந்து சமய அறநிலைய துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் கட்டுப்பாட்டோடு இயங்கும். இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 48 ஆயிரம் கோவில்களை யார் யாருக்கு ஒப்படைக்க முடியும்? விலைமதிப்பற்ற செல்வங்கள், நிலங்கள், கலை பொக்கிஷங்களை இந்து சமய அறநிலையத் துறையால் தான் பாதுகாக்க முடியும். இத்துறையை தனியாருக்கு கொடுக்க சொல்லும் கட்சியின் மற்ற மாநிலங்களின் நிலைப்பாடு என்ன என விளக்கமளிக்க வேண்டும்.
அக்கட்சியினர் நாட்டில் குழப்பதை விளைவித்து, அரசியல் தடுமாற்றத்தை உருவாக்கி இந்துக்கள் அவர்கள் பக்கம் திரும்புவார்களா என எதிர்பார்க்கின்றனர். இந்த ஆட்சியின் 20 மாத கால பணிகள் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நடந்து ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியினர் கனவு பகல்கனவாக முடியும். இந்த ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. 62 சிலைகள் வெளிநாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருடப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இருக்கும் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவில்களை பாதுகாக்கவும், முறைப்படுத்தவும், தொடர்ந்து நடத்தவும் முழு அதிகாரம் அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் தான் உண்டு. தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்ற கருத்து எள்ளவும் நுழையவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” எனத் தெரிவித்தார்.