’இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் பெரிய அளவிலான துன்பத்தை அனுபவித்தோம். இதனால்தான் முதலமைச்சர் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்

தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். முன்னதாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிராண வாயு உற்பத்தி அலகு அமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பான குறும்படத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 266 தடுப்பூசி முகாம்களும், ஊரக பகுதியில் 440 முகாம் என மாவட்டம் முழுவதும் 706 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்த வரை மலைப் பகுதி மற்றும் கிராமப்புற பகுதி, கேரள மாநில எல்லைப்பகுதி ஆகிய முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட முதல் மெகா தடுப்பூசி முகாமில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”ஒரு கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அரசு உதவியுடன் ஒரு பிராண வாயு அலகு உள்ளிட்ட 2 பிராணவாயு அலகு அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் இது இருக்கும். கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் பெரிய அளவிலான துன்பத்தை அனுபவித்தோம். இதனால் தான் முதலமைச்சர் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். ஆட்சி பொறுப்பில் அமர்வதற்கு முன்பு குறைவான தடுப்பூசிகளே போடப்பட்டது. இப்போது அதிகளவிலான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி இந்தியா முழுவதும் 62 சதவீதமும், தமிழ்நாட்டில் 40 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 58 சதவீதமாக உயர்ந்தது. இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் இன்று போடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் மூலம், 15 லட்சத்திற்கு மேல் இன்று தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். 38 மாவட்டங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தொற்று எண்ணிக்கையை பொறுத்த வரை 3 இலக்கத்தில் உள்ளது. அருகே கேரள எல்லை பகுதி உள்ளது. கேரளாவில் தொற்று பெருகி கொண்டிருப்பதால் அச்சம் உள்ளது. எனவே, எல்லைப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

