’நிபா வைரஸ் பரவலை தடுக்க 6 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரளா எல்லையான மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மருத்துவக் கண்காணிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவக் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினர் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரளா எல்லையான மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மருத்துவக் கண்காணிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம், “நிபா வைரஸ் நோய் என்பது நிஃபா வைரஸ் எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும். இது மூளை, இருதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளை பாதிக்கக்கூடியதன்மை உடைய வைரஸ் ஆகும். 1998-99 களில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2001ஆம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள மேற்குவங்கம் ஆகிய பகுதிகளில் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டது. 2018-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, வாளையாறு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பாதிப்பு தொடங்கி இருக்கிறது.
இந்த பாதிப்பை கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளா அரசு சார்பில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களுக்கும் மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்பதற்காக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. அதன்படியும் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படியும் கேரளா எல்லைகளில் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கேரளாவின் எல்லைகள் இருக்கிறது. எனவே இந்த எல்லைகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் வாளையாறு சோதனை சாவடியில் 3887 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவையில் 6 வழித்தடங்களில் கேரளா மக்கள் தமிழ்நாட்டுக்குள் வருகின்றனர். அவை அனைத்திலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவை கேரளா எல்லையில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செய்யப்படும் காய்ச்சல் பரிசோதனை பணிகளை ஆய்வு செய்துள்ளோம்.
டெங்கு பாதிப்பை பொருத்தவரை கடந்த காலத்தில் டெங்கு இறப்பு மிக அதிகமாக இருந்தது. கடந்த ஜனவரி 1 முதல் இப்போது வரை டெங்கு இறப்பு 3 மட்டும் தான். இருந்தும் டெங்கு உயிரிழப்பு இருக்க கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாளை மறுநாள் டெங்கு பரவல் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த சுகாதார அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து, குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளோடு சேர்ந்து எப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்வேறு வகையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. டெங்கு அறிகுறிகளோடு வருபவர்களிடம் மாதிரி பெறப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
இவற்றோடு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவ பிரிவின் மூலம் நிலவேம்பு கசாயம் கையிருப்பு வைக்கப்பட்டு கேட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் என பல விதமாக வந்தது. ஆனால், நிபா வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் என கூறப்படுகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகளிடமிருந்து பரவுவதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் நாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சின்கோனா பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாமை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த மலைக்கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்து சென்று துவக்கி வைத்தார்.