கேரளாவா? தமிழகமா? சோர்வாக எல்லையில் நின்ற யானை! சிகிச்சைக்கு யோசித்த கேரள வனத்துறை!
காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள வனத்துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை கோவை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு - கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருந்தது. வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் யானை இருப்பதாக கூறப்படுகிறது. இரு மாநில எல்லையில் யானை ஆற்றில் நின்று கொண்டு இருந்தால், யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது.
அதே சமயம் கேரளா வனப்ப குதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத் துறையும், தமிழக வனப் பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நின்றனர். இதன் காரணமாக அந்த காட்டு யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.
வழக்கமாக காவல் துறையில் எல்லைப் பிரச்சனை காரணமாக வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வரும் நிலையில், வனத்துறையிலும் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு உடனடியாக சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டுமென சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து கலீம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஆனைகட்டி கொண்டு வரவழைக்கப்பட்டுள்ளன. லாரி மூலம் அழைத்து வரப்பட்ட இரண்டு கும்கி யானைகளும் ஆனைக்கட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காட்டு யானையை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்டு யானை கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட தாசனூர் மேடு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் கேரள வனத்துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை கோவை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்