’இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டிலேயே தமிழ் வெறும் பேச்சு மொழியாகி விடும்’ - கவிஞர் வைரமுத்து வேதனை
”மொழியை பலர் கருவி என்று நினைக்கிறார்கள். மொழி என்பது கருவி அல்ல. மொழி தான் நிலத்தின் அடையாளம். மொழி என்பது பண்பாட்டு கருவி.”
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கலையரங்கில் கவிபேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமும், இலக்கியத் துறையில் 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இலக்கிய பொன்விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.பி ப.சிதம்பரம், அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “எனக்கென்று தனி ஆற்றல் உண்டா என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. மக்களால் தான் நான் ஊட்டம் பெருகிறேன். இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்னும் சரியாமலும், இலங்கை போல் ஆகாமலும் இருக்கிறது என்று சொன்னால் அது ப.சிதம்பரத்தால் தான். வடுகபட்டி வைரமுத்து பட்ட துயரம் மட்டுமல்ல வைரமுத்துவை போல் இன்னும் பல பேர் கவலை படுகிறார்களே என்ற எண்ணம் சிதம்பரத்திடம் உள்ளது.
துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை வகிப்பது உங்கள் வாழ்வின் உச்சம். அண்ணா வகித்த பதவி அது. துரைமுருகனுக்கு பள்ளி கட்டணம் கட்டி, பேனா புத்தகங்கள் வாங்கி கொடுத்தது எம்ஜிஆர். ஜெயலலிதாவே துரை முருகனிடம் நீங்கள் நடிக்க சென்றிருந்தால் பல நடிகர்கள் பின்னால் சென்றிருப்பர் என்று கூறினார். சிவன் தலையில் நீரை வைத்திருப்பார். ஆனால் துரைமுருகன் அவரது கையில் நீர்வள துறையை வைத்துள்ளார்.
தேவாவும் நானும் சேர்ந்தால் அந்த இடத்தில் கலை நாடகமே நடக்கும். ஒலிப்பதிவு கூடத்தில் தமிழை காப்பாற்றுவது தான் எங்களுக்கு மிகப் பெரிய வேலை. பிறந்தநாள் என்று சொன்னவுடன் மார்பு படபடக்கும், அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். ஆயிரக்கணக்கான நபர்களை நான் திருப்திபடுத்த வேண்டுமே. அவர்களின் மீது வைத்துள்ள அன்பை கெடுத்துக் கொள்ளக்கூடாதே. அவர்களின் உபசரிப்பில் எந்த ஒரு குறையும் வந்துவிடக் கூடாதே. என்று மனது படபடக்கும். இருப்பினும் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடவில்லை என்றால், எனது உறவுகளை நான் எங்கு சந்திப்பேன்? தமிழை எங்கு பகிர்வேன்?.
மொழியை பலர் கருவி என்று நினைக்கிறார்கள். மொழி என்பது கருவி அல்ல. மொழி தான் நிலத்தின் அடையாளம். மொழி என்பது பண்பாட்டு கருவி. தமிழ் பள்ளிக்கூடங்களில் மிகப்பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அது தமிழ் மாணவர்களை படிக்கச் சொன்னால் படிக்க தெரிவதில்லை, எழுத சொன்னால் எழுதத் தெரிவதில்லை. மொழியை கற்றவர்கள் மொழியோடு பரிட்சயம் பெறவில்லை, மொழியோடு புலமை பெறவில்லை. இது பள்ளி திட்டத்தின் குறையா, ஆசிரியர்களின் குறையா என தெரியவில்லை.
இதுபோன்று இன்னும் 50 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டிலேயே தமிழ் வெறும் பேச்சு மொழியாகி விடும் விபத்து நடைபெறும். தமிழ் மாணவர்கள் தமிழை எழுதவும், பேசவும் தமிழில் உரையாடவும், தமிழில் எழுத்திடவும் போதிய வலிமையும் வளமையும் பெற்றால் ஒழிய தமிழ் பேச்சு மொழியாகிய விட கூடியதை தடுக்க முடியும். அந்த இடத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் பள்ளிகளில் மாணவர்களுக்கு படித்தல் பயிற்சி எழுத்து பயிற்சி இவைகளை எல்லாம் அளிக்க வேண்டும்.
தேர்வு மட்டும் போதாது. மொழி என்பது வாழ்வோடு சம்பந்தப்பட்டது. எனவே தேர்வை தாண்டி மொழியை வாழ்வோடு கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு நடந்த 10ம்வகுப்பு 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மொழி பாடத்திலேயே தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மொழிப் பாடத்தை மேம்படுத்த உரிய திட்டங்களை இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் கல்வி யுகமும் அறிவு யுகமும் சேர்ந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்தார்.