Local body election |கோவை திமுகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் - சமாளிப்பாரா செந்தில்பாலாஜி?
ஒரே நேரத்தில் அதிருப்தி திமுகவினரையும், அதிமுகவினரையும் சாமாளிக்க வேண்டிய நெருக்கடி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ளது.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 74 வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 26 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 99 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக 74 வார்டுகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது.
இதனிடையே வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு ஆகியவற்றில் அதிருப்தி அடைந்த திமுகவினர் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். திமுகவின் கோவை மாநகராட்சி மேயராக அறியப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. பொள்ளாச்சியில் வேட்பாளரை மாற்றக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் கார் முற்றுகையிடப்பட்டது. மகளிரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என அதிருப்தி திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர்களை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர்களின் மனைவி, மகள்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் அதிருப்தி குரல்கள் ஒலித்தன. திமுக மாவட்ட பொறுப்பாளர்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைக் கருத்தில் கொண்டு ஒரு பரப்புரை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ”மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தியில் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தொகுதிகளை இழந்ததை போல் நடக்காமல் தடுக்க பகுதி செயலாளர்கள் தங்களது பூத்களை பார்த்துக் கொள்ள வேண்டும். சீட் கிடைக்காதவர்கள் வீடுகளுக்கே சென்று வேட்பாளர்கள் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்க வேண்டும்” என தெரிவித்தார். தற்போது திமுகவினரின் போராட்டங்கள் ஓய்ந்த போதும், உட்கட்சி பூசல் ஓய்ந்தபாடில்லை. நீறு பூத்த நெருப்பாக தொடர்ந்து புகைந்து கொண்டுள்ளது. திமுக வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தி திமுகவினர் வேலை செய்து வருகின்றனர்.
போதாக்குறைக்கு சில இடங்களில் கூட்டணி கட்சியினர் திமுகவினருக்கு எதிராக திரும்பி இருப்பது கோவை திமுகவிற்கு இரட்டை தலைவலியாக அமைந்துள்ளது. போதிய இடங்களை ஒதுக்கவில்லை என கூட்டணி கட்சிகள் முணுமுணுத்தனர். சில இடங்களில் கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. கண்ணம்பாளையம் பகுதியில் திமுகவிற்கு எதிராக சிபிஐ, சிபிஎம், கொமதேக ஆகிய கட்சிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. வால்பாறை நகராட்சியில் சிபிஎம் வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுகவினர் பேரம் பேசியதை ஏற்காததால், உதயசூரியன் சின்னத்தில் திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியது. பரப்புரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தவிர்க்கப்பட்டது, அக்கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக திமுகவிற்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்தனர்.
அதேசமயம் அதிமுக கூட்டணியில் எந்த அதிருப்தி குரலும் ஒலிக்கவில்லை. அதிருப்தியில் உள்ள திமுகவினரை அதிமுகவிற்கு ஆதரவாக திருப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கோவையில் திமுக பலவீனமாக இருக்கும் நிலையில், திமுகவினரே திமுகவிற்கு எதிராக திரும்பி வருவது கோவை திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளையும் திமுக இழந்ததால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தேர்தல் வியூகம் வகுப்பதில் தேர்ச்சி பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி களமிறக்கப்பட்டார். கரூரில் இருந்து ஆட்களை இறக்கி அவர், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். இருந்த போதும் கோவை திமுகவில் நீடிக்கும் உட்கட்சி பூசல் வெற்றியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிருப்தி திமுகவினரையும், அதிமுகவினரையும் சாமாளிக்க வேண்டிய நெருக்கடி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ளது.