Crime : வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய கணவன், மனைவி.. கோவையில் நடந்தது என்ன?
திருட்டில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வரும் இவர், கடந்த 20ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். மருத்துவமனையில் மகனை பார்த்த பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (33) மற்றும் அவரது மனைவி தேவி (31) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பிரகாஷ் மற்றும் தேவி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். திருட்டில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.