கோவை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழங்குடி மாணவர்களின் கல்வி : அன்பாசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!
இப்போ கொரோனானால ஸ்கூல் இல்லை. இங்க டவர் சரியாக கிடைக்காது. கரெண்ட் இல்லை. அதனால குழந்தைகள் படிக்க வழியில்ல. குழந்தைகள் விளையாடுறது, ஆடு, மாடு மேய்க்கிறதுனு இருக்காங்க.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியாக ஆனைக்கட்டி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றி, அடர்ந்த வனங்களுக்குள் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு விவசாயம் மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பு வாழ்வாதாரமாக உள்ளது. அண்மைக்காலமாக தான் இக்கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாக பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் மலைத் தொடர்களிலும், அடர் வனங்களிலும் வாழும் பழங்குடியின மாணவர்களின் கல்வி கேள்வி கேள்விக்குறியாகியுள்ளது. பல்வேறு சிரமங்களைத்தாண்டி பள்ளிகளுக்கு பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில வருவதே சவாலாக உள்ள நிலையில், அம்மாணவர்களின் கல்விக்கு கொரோனா தொற்று பெரும் தடைக்கல்லாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதிகளில் ஊரடங்கால் கல்வி பயில முடியாத மாணவ, மாணவிகளுக்கு பட்டதாரி மாணவர்கள் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தூமனூர். அடர்ந்த வனத்திற்குள் உள்ள இக்கிராமத்திற்கு அருகே சேம்புக்கரை, காட்டுச்சாலை ஆகிய ஊர்கள் உள்ளன. இவை மின்சாரம் மற்றும் செல்போன் சிக்னல் வசதி உள்ளிட்டவை இல்லாத கிராமம். என்றாலும் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பயில ஒரு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஊரடங்கால் படிக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்காக ஆசிரியராக மாறியுள்ளார், பி.ஏ. பட்டதாரியான மாலதி. சமூகக்கூடத்தை வகுப்பறையாக மாற்றி, 22 குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இதுகுறித்து மாலதி கூறுகையில், “எங்க ஊர் காட்டுக்குள் இருக்கு. போதிய வசதிகள் இல்லை. எங்க ஊருல கல்வியறிவு குறைவு. படிப்பு பத்தி விழிப்புணர்வு கிடையாது. எட்டாவது மேல படிக்கணும்னா, ஆனைக்கட்டி, தடாகம் ஸ்கூல்க்கு போகணும். அதனால படிப்பை பாதியில நிறுத்துறவங்க அதிகம். 5 பேர் தான் எங்க ஊர்ல காலேஜ் படிச்சு இருக்காங்க. என்னை எங்க அப்பா வெளியூர்ல வாடகைக்கு வீடு எடுத்து தாங்கி படிக்க வைச்சதுனால பி.ஏ படிச்சேன். அடுத்து பி.எட் படிக்கணும் ஆசை. ஆனா வசதியில்லாதனால படிக்க முடியல. இப்போ கொரோனானால ஸ்கூல் இல்லை. இங்க டவர் சரியாக கிடைக்காது. கரெண்ட் இல்லை. அதனால குழந்தைகள் படிக்க வழியில்ல. குழந்தைகள் விளையாடுறது, ஆடு, மாடு மேய்க்கிறதுனு இருக்காங்க. இப்படியே போனா அவீங்களுக்கு படிப்பு மறந்து போயிடும். அதனால நான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்னு டியூசன் எடுத்திட்டு இருக்கேன்.
ஒன்னாவதுல இருந்து எட்டாம் வகுப்பு வரை 22 பேருக்கு பாடம் எடுக்குறேன். பழங்குடி மொழியில பேசுற எங்க ஊரு குழந்தைகளுக்கு, தமிழே புதுசாதான் இருக்கும். அதனால முதலில் தமிழ் மொழி சொல்லித்தரேன். அதேமாதிரி ஆங்கிலம், கணிதம் பாடங்களை நடத்துறேன்.
படிச்சா தான் மேலே வர முடியும். எல்லோரும் சமநிலைக்கு வரணும். அதுதான் என் ஆசை” எனத் தெரிவித்தார்.
இதேபோல ஆலமரமேடு பகுதியில் விக்னேஷ் என்ற இளைஞர், திவ்யா, சிவரஞ்ஞனி, குமார் ஆகியோர் உடன் இணைந்து மலைவாழ் குழந்தைகளுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை 20 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். கொரோனாவால் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலையில், செல்போன் இல்லாததாலும், டவர் பிரச்சனைன்னாலும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத மாணவ, மாணவிகளுக்காக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
கல்வி தான் சமூகத்தை மேலே உயரத்தும் என்பதை உணர்ந்து, தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்றுத்தரும் பட்டதாரி இளைஞர்கள், அங்குள்ள மலைகளை விட உயர்ந்து நிற்கிறார்கள்.
பழங்குடியின கிராமத்தின் முதல் பட்டதாரி; ஊரடங்கில் ஆசிரியரான நெகிழ்ச்சி கதை!