'பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் இடம்பெறுமா?’ - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
பட்ஜெட்டில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு வளாகத்தில் ‘எக்ஸ்பிரிமெண்டா’ என்ற அறிவியல் மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அறிவியல் மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 40 ஆயிரம் சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மையத்தில் 120 க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை எளிதாக கற்கும் விதமாக இந்த அறிவியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்லா பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் வகையில் முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை துவக்கியுள்ளார். இத்திட்டம் முதலமைச்சரின் தனிப்பட்ட கவனம் மூலம் சிறப்பு முயற்சியாக துவங்கப்பட்டது. கோவைக்கும், ஜெர்மனிக்கும் நல்ல உறவு உள்ளது. இந்த கண்காட்சியில் உள்ள 120 அறிவியல் பரிசோதனை கருவிகள் பாதி ஜெர்மனியிலும், பாதி கோவையிலும் தயாரிக்கப்பட்டவை. வரும் தலைமுறைக்கு விஞ்ஞான அறிவை ஊக்குவிக்கும் இந்த மையம், உலக அளவில் முன்னுதாரணமான மையமாக உள்ளது. இந்த மையத்தினால பல ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாடு முக்கியம். அரசு மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வாய்ப்புகளை உருவாக்க உள்ளோம். அரசால் ஒரளவு தான் செய்ய முடியும். தனியார் பங்களிப்புடன் கூடுதலாக பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மையத்தில் பயிற்சி பெற்றால், ஜெர்மனியில் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, “முதலமைச்சர் சொல்வது நடக்கும். தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது” எனப் பதிலளித்தார். கல்விக்கடன் இரத்து தொடர்பான கேள்விக்கு, “முதலமைச்சர் சொல்வது படிப்படியாக நடக்கும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கல்வித் துறையில் வேறு எந்த மாநிலத்தையும் விட கூடுதலாக தமிழ்நாடு செலவு செய்கிறது. ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ஒரு வருடத்திற்கு முழுமையாகவும், 3 மாதத்திற்கு கொஞ்சமும் இருக்கிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஒன்றிய நிதியமைச்சர் சொன்னார். ஆனால் 4231 கோடி இன்னும் வர வேண்டியுள்ளது. இந்த மாதத்திற்குள் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரும். அது தவிர்த்து 4 ஆயிரம் கோடி வரை இழப்பீட்டு தொகை வர வேண்டிய பாக்கி உள்ளது. மாதம் மாதம் வரும் ஜிஎஸ்டி தொகையும் தாமதமாக வருகிறது. எல்லா வரியையும் ஒன்றிய அரசு வசூலித்து, திருப்பி தருவது திறனற்ற செயல். அந்தந்த மாநிலம் வசூலிக்கும் தொகையை வைத்துக் கொள்வதும், மத்திய அரசிற்கான வரியை மத்திய அரசிற்கு செலுத்துவதும் என்னை பொருத்தவரை சரியான முறை. அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி செயல்பாட்டை சிறப்பிக்க முதலமைச்சர் ஒப்புதலுடன் சில கருத்துக்களை சொல்ல உள்ளேன்.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடியாக இருந்தது. நிதி பற்றாக்குறை 90 ஆயிரம் கோடியும் இருந்தது. முதல் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை 46 ஆயிரம் கோடியாக குறைத்தோம். நிதி பற்றாக்குறையை 70 சதவீதம் குறைத்தோம். ஏற்கனவே வெள்ளை அறிக்கையில் காட்டியபடி கடந்த அரசு 40 ஆயிரம் கோடியை பின்வாசல் வழியாக எடுத்திருந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்தாண்டும் முன்னேறுவோம். சட்டமன்றத்தில் வைக்காத தகவலை தனிப்பட்ட முறையில் சொல்லக்கூடாது. அதேசமயம் இந்த சீர்திருத்தம் படிப்படியாக செய்ய வேண்டியுள்ளது. 2003 முதல் 2014 வரை எந்த ஆட்சி இருந்தாலும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை சிறப்பாக இருந்தது. 2014 க்கு பிறகு 2021 வரை 7 ஆண்டுகளில் நிதிநிலை சரிவை மூன்றில் இரண்டு பங்கு இரண்டு ஆண்டுகளில் திருத்தியுள்ளோம். நிதித் துறையில் பல திருத்தங்களை செய்ததால் இந்தளவு செய்ய முடிந்தது. இன்னும் பணி பாக்கி இருக்கிறது.
நான் தேர்தலில் 2 முறை போட்டியிட்டுள்ளேன். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை. மக்களுக்கு நன்றாக பணி செய்கிறேன் என்ற நம்பிக்கையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்பதை வெளிப்படையாக சொல்வேன். யாரவது அதற்கு மறுப்பு சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். இலவச பொருட்களை பொருட்களை பொருத்தவரை அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் எது நல்லது என்பதை சிந்திக்க வேண்டும். சமுதாயம் முன்னேற ஒரு சமமான நிலை உருவாக்க ஏழை, எளிய மக்கள் பயன்பெற பணம் வாங்காமல் கொடுக்க தான் அரசு உள்ளது. அதேசமயம் எல்லா விலையில்லா பொருட்களும் நல்லது என சொல்ல முடியாது. அதானி பங்குசந்தை குளறுபடிகள் தொடர்பாக செபி, ஆர்.பி.ஐ, எக்ஸ்சென்ஸ்க்கு எப்படி தெரியாமல் இருந்தது? இது குறித்து பல முறை நாடாளுமன்றத்திலும் கூறிய போதும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?ஏன் இப்போது வெளியேவந்தது என்பதை சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.