கோயம்புத்தூர் To சேலம் 1 மணி நேரம்! திருப்பூர் 20 நிமிடம்! ஈரோடு 40 நிமிடம்! வருகிறது RRTS ரயில்!
Coimbatore RRTS Train: " கோயம்புத்தூர் முதல் சேலம் இடையே, 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் சேவை அமைப்பது குறித்த சாத்தியகூறுகள் ஆராயப்பட உள்ளன"

Salem RRTS Train: " RRTS ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது"
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள்
தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னை போன்று, தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் ஆகியவை முக்கிய நகரங்களாக இருந்து வருகிறது. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவை தொழில் நகரமாக இருந்து வருவதால், இந்தப் பகுதிகளில் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வேலை வாய்ப்புக்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களை நோக்கி படையிருக்கின்றனர். அதேபோன்று சேலம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவு இந்த பகுதிக்கு சென்று, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் போன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வளர்ச்சியை பரவலாக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த வகையில் சென்னை தவிர்த்து பிற பகுதிகளுக்கும் புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் முதல் சேலம் வரை விரைவு மண்டல போக்குவரத்து அமைப்பை உருவாக்க முயற்சியில் இறங்கியுள்ளது.
கோயம்புத்தூர் - திருப்பூர்- ஈரோடு- சேலம் (Coimbatore-Tirupur-Erode-Salem RRTS Train)
கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக சேலத்திற்கு மண்டல அதிவிரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS) அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் இறுதியில், கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடத்தில் RRTS ரயில் சேவைக்கு சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு டெண்டர் விடப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இந்த வழித்தடத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report - DFR) தயாரிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. பாலாஜி ரயில் ரோடு (Balaji Railroad Systems (BARSYL)) நிறுவனம் இந்த DFR தயாரிக்கும் ஆணையை வென்றுள்ளது. இந்த டென்டலுக்கான போட்டியில் ஐந்து நிறுவனங்கள், கலந்து கொண்டனர். இதில் மிகவும் குறைந்தபட்சமாக 74.78 லட்சம் ரூபாய், செலவில் திட்ட அறிக்கை தயாரிக்க பாலாஜி ரயில் ரோடு நிறுவனம் டெண்டர் கேட்டிருந்தது.
திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
இதனைத் தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்ட அறிக்கையில் வழித்தடம், ரயில் நிறுத்தங்கள், நிலம் கையகப்படுத்தும் விவரங்கள், நிலம் கையகப்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகும், ரயில் பாதை கட்டுமான பணிகளுக்கு எவ்வளவு செலவாகும் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்குள் இந்த நிறுவனம் அரசிடம், திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை சென்னை மெட்ரோ நிறுவனத்தால் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகு முழுமையான பணிகள் தொடங்கும்.
ஆர்.ஆர்.டி.எஸ் ரயில் சேவையில் சிறப்பு அம்சங்கள்
இந்த ரயில் சேவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். தற்போது சூழலில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினால், கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வர குறைந்தபட்சம் 4 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அதுவே இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் கோயம்புத்தூர் முதல் சேலம் வரை 1 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் 15 நிமிடத்தில் சென்றுவிடலாம்.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பூருக்கு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம். கோயம்புத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். முக்கிய நகரங்களை இந்த ரயில் சேவை இணைக்க உள்ளதால், போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.





















