கோவையில் இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை முன்னறிவிப்பு இதோ..!
இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்கிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மழைப்பொழிவு விபரம்
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. போத்தனூர், சாய்பாபா காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி, வேலாண்டிபாளையம், வெள்ளலூர், இடையர்பாளையம், டிவிஎஸ் நகர், ரயில் நிலையம், வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல நீர் நிலைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கோவை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்த நிலையிலும், முந்தைய தினத்தை விட மழையின் அளவு சற்றே குறைவாக காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் 207.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அணை பகுதியில் 20 மி.மீ. மழையும், சிங்கோனா பகுதியில் 18 மி.மீ. மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 17 மி.மீ. மழையும், வால்பாறை தாலுகா, சின்னக்கல்லார் மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளில் 16 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோவை தெற்கு தாலுக்காவில் 11.80 மி.மீ. மழையும், பெரியநாய்க்கன்பாளையத்தில் 11 மி.மீ. மழையும், மதுக்கரையில் 9 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும், கனமழைக்கு வாய்ப்பு இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணை, வால்பாறை தாலுகா, சிங்கோனா, சின்னக்கல்லார், சிறுவாணி அடிவாரம், சூலூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, பீளமேடு, அன்னூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் எனவும், பொள்ளாச்சி வரப்பட்டி பகுதியில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.