Covai Metro: தொடங்கியாச்சு..! கோவை மெட்ரோ ரயில் பணிகள், எங்கிருந்து எதுவரை? 32 நிலையங்கள், எப்போது பயணிக்கலாம்?
Coimbatore Metro Rail Latest News: கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

Covai Metro: கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் பணிக்கு முன்னதாக கேபிள்கள், குழாய் வழித்தடங்களை வரைபடமாக்குவதற்கான பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம்:
தலைநகர் சென்னையின் பிரதான போக்குவரத்து அம்சமாக மெட்ரோ ரயில் மாறியுள்ளது. முதற்கட்டத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மற்ற பிரதான நகரங்களுக்கும், தேவையின் அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அதன்படி, சென்னையை தொடர்ந்து அடுத்ததாக கோவையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவினாசி சாலை மற்றும் சதி சாலை வரையில் சுமார் ரூ.10,500 கோடி செலவில் 40 கி.மீ.க்கு மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆய்வுப் பணிகள் தொடக்கம்:
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, கோயம்புத்தூர் சிட்டி முனிசிபல் கார்ப்ரேஷனின் (CCMC) நகர திட்டமிடல் ஆணையம், திட்டத்தின் முதல் கட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. அவினாசி மற்றும் சதி சாலை இடையே, அடுத்த சில மாதங்களுக்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.154 கோடி நிதி ஒதுக்கீடு
பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சதி சாலையில் நிலம் கையகப்படுத்தல் பணிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், கோயம்புத்தூர் சிட்டி முனிசிபல் கார்ப்ரேஷனுக்கு ரூ.154 கோடியை ஒதுக்கியது. சில வாரங்களுக்கு முன்பு, நிலம் கையகப்படுத்த பணிகளை ஆய்வு செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.2 கோடியை அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் கோயம்புத்தூர் சிட்டி முனிசிபல் கார்ப்ரேஷன் கணக்கெடுப்பு மற்றும் பயன்பாட்டு மேப்பிங் பணிகளை மேற்கொள்ள, நகர திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த சர்வேயர்களை நியமித்துள்ளது.
முதற்கட்ட ஆய்வுப் பணிகள்:
அதன்படி, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆய்வுப்பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. குடிநீர் குழாய்கள், UGD குழாய்கள், எரிவாயு குழாய்கள், நெட்வொர்க் கேபிள்கள், மின்சார கம்பிகள் என நிலத்தடியில் செல்லும் பிறவற்றை அடையாளம் காண வரைபடம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை கொண்டு, வரைபடத்துடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். நில கையகப்படுத்துதல் பணிகளுடன், மெட்ரோ பணிகளுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த பயன்பாடுகள் சாலையின் விளிம்பிற்கு மாற்றப்படும்.
இரண்டு கட்டங்களாக பணிகள்
ஆரம்ப கட்ட பனிகள் முடிவடைந்ததும், அடுத்த சில மாதங்களிலேயே மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். அந்த நாளிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்குள், கோவை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும். இதற்கான நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கட்டுமானத்திற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அங்கு கொண்டு செல்லும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
32 மெட்ரோ ரயில் நிலையங்கள்
அவினாசி சாலையில் உள்ள வழித்தடம்-1 (Corridor-1) உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து நீலம்பூர் ஒருங்கிணைந்த நிலையம் வழியாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் வரை 20.4 கி.மீ நீளத்தில் 18 மெட்ரோ நிலையங்களுடன் இருக்கும். சத்தியமங்கலம் சாலையில் அமையவுள்ள வழித்தடம்-2 (Corridor-2) கோயம்புத்தூர் ரயில் சந்திப்பிலிருந்து வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ நீளத்தில் 14 மெட்ரோ நிலையங்களுடன் இருக்கும். இந்த திட்டம் ரூ.10,740 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்புகள்:
மெட்ரோ ரயில் திட்டமானது கோயம்புத்தூர் மற்றும் போத்தனூர் ரயில் சந்திப்புகள், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்கள், வெள்ளலூர் பேருந்து முனையம், கோயம்புத்தூர் விமான நிலையம் மற்றும் பிற முக்கிய போக்குவரத்து மையங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான இயக்கத் திட்டத்திற்கு இணங்க, நீலம்பூரில் இருந்து எல் & டி பைபாஸ் சாலை வழியாக மெட்ரோ ரயிலின் எதிர்கால நீட்டிப்புகளுக்கும், திருச்சி மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் புதிய பாதைகளை நிறுவுவதற்கும் ஏற்பாடுகள் இருக்கும். நீலம்பூரில் ஒரு பணிமனை அமைக்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

