”தட்டிக்கேட்டதற்கே கத்தி குத்து” - அதிமுக பிரமுகர்களை தாக்கி போதை ஆசாமிகள் அட்டகாசம்...
பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர்களுக்கு கத்திகுத்து. தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீசார் வலை.

கோவை சிங்காநல்லூர் - ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் அருகே பொது இடத்தில் வைத்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர்கள் இருவரை போதை ஆசாமிகள் 3 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்டிகேட்ட அதிமுக பிரமுகர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள அதிமுக மன்ற அலுவலகம் அருகே 3 பேர் அமர்ந்து மது அருந்தியதோடு தகாத வார்த்தைகளால் பேசி அலப்பறையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அப்போது, அந்த பகுதியில் பெண்கள் அதிகமானோர் இருந்ததால் அங்கிருந்த கோவை மாநகர் 56வது வட்டக் கழக செயலாளர் சுரேஷ், அதிமுக பாசறை மாவட்ட இணை செயலாளர் ஈஷா செந்தில் ஆகியோர் 3 பேரை தட்டிகேட்டுள்ளனர். இருவரையும் பழிவாங்க நினைத்த 3 பேர், சம்பவத்தன்று மீண்டும் அதிமுக அலுவலகம் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஈஷா செந்தில் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.
அதிமுக பிரமுகர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இருவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கத்தியால் குத்திய நபர்கள் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை, அனிஷ் மற்றும் முருகேசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அதிமுக பிரமுகர்கள் இருவர் கத்தியால் குத்தி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















